

சென்னை
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதி கைதான மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை அளித்த தகவலின்பேரில் ஒரு மாணவி, 2 மாணவர் உட்பட அவர்களது பெற்றோர்களும் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் பணியாற்றுபவர் டாக்டர் வெங்கடேசன். இவரது மகன் உதித்சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் சேர்ந்தார். இதுகுறித்து தகவலறிந்து நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து மாணவர் கல்லூரியைவிட்டு நின்றுவிட்டார். கல்லூரி முதல்வர் போலீஸில் புகார் அளித்தார். உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவானார். வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது.
திருப்பதியில் தலைமறைவாக இருந்த உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன், தாயார் உள்ளிட்டவர்கள் பிடிபட்டனர். தனது மகனை மருத்துவராக்க 2 முறை நீட் தேர்வு எழுதவைத்தும் தேர்வாகததால் குறுக்குவழியில் புனேயில் வேறு நபரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து நானே என் மகன் கைதாகும் நிலைக்கு தள்ளி வாழ்க்கையை அழித்துவிட்டதாக தந்தை டாக்டர் வெங்கடேசன் தெரிவித்தார். இந்த வழக்கில் தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டனர்.
வெங்கடேசன் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் உதித்சூர்யா தேர்வெழுத உதவிய நபர் யார் என தெரிந்தது. திருவனந்தபுரத்தில் நீட் கோச்சிங் மையம் நடத்திவரும் ஜார்ஜ் ஜோசப் என்கிற நபர்மூலம் புனேவில் வேறொரு நபர்மூலம் தேர்வு எழுத வைத்துள்ளது தெரியவந்தது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட ஜார்ஜ் ஜோசப் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். நீட் தேர்வில் உதித்சூர்யாவுடன் சேர்ந்து மேலும் 5 மாணவர்கள் இதேப்போன்று ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதியதாகவும் ஒருவர் தேர்வாகத நிலையில் மீதி 4 பேர் பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்தது.
இந்நிலையில் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் 6 பேரை சிபிசிஐடி போலீஸார் சென்னையில் கைது செய்தனர். சத்ய சாய் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவி அபிராமி அவரது தந்தை மாதவன், பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவீன் அவரது தந்தை சரவணன், எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மாணவர் ராஹுல் அவரது தந்தை டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக தேனிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வலைப்பின்னலாக நீட் தேர்வு முறைகேடு தொடர்ந்துள்ளது என தெரிகிறது, மேலும் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில் தேனி கல்லூரி முதல்வர் தங்கள் கல்லூரி பேராசிரியர்கள் சில தன்னை மிரட்டுவதாக புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.