

சென்னை
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வருவதையொட்டி, மாமல்லபுரத்தில் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் மாதம் 11-ம் தேதி இந்தியா வர உள்ளார். இரு தலைவர்களின் சந்திப்பு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. மேலும், பாரதப் பிரதமரும் சீன அதிபரும் அக். 13-ம் தேதி வரை தங்கிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவர்கள் இருவரும் கோவளம் பகுதியில் உள்ள பிஷர்மேன் கோவ் ரிசார்ட் என்ற நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, சீன அதிபரின் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் சீனப் பாதுகாப்பு அதிகாரிகள், கடந்த செப். 20-ம் தேதியன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக சுற்றுலா அதிகாரிகள், உள்துறை உயரதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாமல்லபுரத்தில் இரு தலைவர்களின் வருகையின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காகவும், சாலைகளில் இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும், சாலையோர ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.
அதேபோல விடுதிகளில் மாதக்கணக்கில் தங்கியிருக்கும் இலங்கை, திபெத் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து தங்கியுள்ளவர்களின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட விவரங்களை மாமல்லபுரம் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாமல்லபுரம் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதிக்கப்படுகின்றன. அதற்குப் பிறகே பயணிகள், சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல சுற்றுலாத் தலங்களை இரு தலைவர்களும் பார்வையிடுவதால், அவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் பாதைகளில் கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான 20 கி.மீ. நீளத்துக்கு, கடற்கரைப் பகுதிகளில் எவ்வித போட்டிகளையும் நடத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.