Last Updated : 28 Sep, 2019 04:34 PM

 

Published : 28 Sep 2019 04:34 PM
Last Updated : 28 Sep 2019 04:34 PM

'புவனா ஒரு கேள்விக்குறி' உள்ளிட்ட ஏராளமான கதைகளை எழுதிய மகரிஷி காலமானார்

சேலம்

பல்வேறு திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய நாவலர் மகரிஷி காலமானார். அவருக்கு வயது 87.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த கிருஷ்ணசாமி சர்மா மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் பாலசுப்பிரமணி. சிறுவயது முதலே துடிதுடிப்பும் படிப்பில் ஆர்வமும் கொண்ட இவர், அந்த காலத்து பியூசி முடித்தவர். தமிழ்ப் பற்றுக் காரணமாக கதை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருந்தார். பள்ளிப் படிப்பின் போதே கதை, கட்டுரை போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றவர்.

1950-க்குப் பிறகு சேலம் மாவட்டம் வந்த பாலசுப்பிரமணி, சேலத்தில் உள்ள நூலகம் ஒன்றில் பணிபுரியும் பத்மாவதியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு வக்ஷா ராமகிருஷ்ணன் என்ற மகனும் காயத்ரி என்ற மகளும் உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை புனைப்பெயரில் பாலசுப்பிரமணி எழுதியுள்ளார். இவரது நாவல்களில் புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம், பத்ரகாளி, நதியை தேடிவந்த கடல் உள்ளிட்ட 6 கதைகள் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

வன்முறை இல்லாத மென்மையான படைப்புகளை மிகக் கவனமுடன் எழுதியுள்ளார். பாலசுப்பிரமணி, தன்னுடைய கதைகளுக்காக பெரும் பாராட்டுகளை பெற்றார். 40 வருடங்களுக்கு முன்பாக இவருக்கு மகரிஷி என்ற பட்டம் கிடைத்தது. இறுதி காலம் வரை எழுதிக் கொண்டே இருந்தவர் பாலசுப்பிரமணி. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கல்லூரிகளில் இவரது கதைகளை ஆய்வு செய்து ஏராளமான மாணவ, மாணவிகள் பிஹெச்டி பட்டம் பெற்றுள்ளனர்.

சாகித்ய அகாடமி விருது பெற தகுதியிருந்தும் இறுதிவரை பெற முடியாமல் போனது. இவர் எழுதிய கதைகளில் பழம்பெரும் நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் முதல் ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

எந்தவித ஆபாச வார்த்தைகளையோ அல்லது கடினமான சொற்களையோ பயன்படுத்தாமல் திரைப்படத்துக்கு ஏற்றவாறு கதைகளை எழுதி சாதனை படைத்தார். இந்நிலையில், 87 வயதான பாலசுப்பிரமணி, நேற்றிரவு (செப்.27) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறப்பு செய்தியைக் கேட்டு திரைத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலுக்கு உறவினர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x