

சென்னை
திருப்பதி திருக்குடை ஊர்வலம், இன்று காலை சென்னை பாரிமுனையில் உள்ள பூக்கடை, சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் இருந்து சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது.
திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் போது, தமிழக பக்தர்கள் சார்பில், இந்து தர்மார்த்த சமிதி, 11 வெண் பட்டுக் குடைகளை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் சமர்ப்பித்து வருகிறது. இதன்படிஇந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று தொடங்கியது.
பீடாதிபதிகள் அருளாசி வழங்கி, திருக்குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இந்த ஊர்வலத்தை முதல் 3 நாட்களில், 15 லட்சம் பக்தர்கள் வரை தரிசிப்பர்.
திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. பின்னர் சால்ட் கொட்டகை (நடராஜா தியேட்டர்), செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோவிலைச் சென்றடையும்.
பின்னர் அங்கிருந்து அக்டோபர் 2-ந் தேதி மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது. 3-ந் தேதி திருமலையில் மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்களுடன் திருப்பதி ஜீயர் முன்னிலையில் திருமலை– திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படும்.
திருக்குடை ஊர்வலம் குறித்து இந்து தர்மார்த்த சமிதி சார்பில் கூறும்போது, ''ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது. திருக்குடை செல்லும் வழியில் தெருவிலோ, சமாஜங்களிலோ அல்லது கோவில்களிலோ பொதுவான பூஜைக்கு ஏற்பாடு செய்வதாக இருந்தால், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.