Published : 23 Jul 2015 03:36 PM
Last Updated : 23 Jul 2015 03:36 PM

நடப்பு கல்வி ஆண்டு முதல் பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பு தொடரப்படாது: பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வரும் பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பு, நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடரப்படாது என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தொலை தூர பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பு 2008-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தரமற்ற முறையில் நடத்தப்படும் பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழகத் தில் முழு நேரமாக ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவ, மாணவிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பு குறித்து ஆராய்வதற்காக ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு அளிக்கும் அறிக்கை யின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பல்கலைக் கழக துணை வேந்தர் ஜி.ஜேம்ஸ் பிச்சை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாணவர்கள் அளித்திருந்த காலக்கெடு நேற்று டன் முடிவடைந்தது. இதையடுத்து, பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பாகத் திரண்டு பி பிரிவு உடனடியாக ரத்து செய்ய வலி யுறுத்தி மாணவர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள், பதிவாளர் உள்ளோட்டோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, ‘பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பு இந்த கல்வி ஆண்டு முதல் தொடரப்படமாட் டாது. பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு பரிந்துரையின் பேரில் அந்தப் படிப்பை தொடர்ந்து நடத்த வேண்டாம் என முடிவெடுத்துள் ளது’ என பதிவாளர் க.கோ.செந்தில்வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அந்த அறிவிப்பில், ‘நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும். ஏற்கெனவே, படித்து முடித்து வெளியே பி பிரிவு ஆராய்ச்சி முனைவர்களின் சான்றிதழில் பி பிரிவு என்பதை குறிப்பிட்டு முழு நேர சான்றிதழில் இருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும். பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பு முடித்தவர்கள் எதிர்காலத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அந்தஸ்து கொடுக்கப்படக் கூடாது’ என வலியுறுத்தினர். இது தொடர்பாக, பல்கலைக்கழக நிர்வாகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே, படித்து முடித்த பி பிரிவு முனைவர்களின் சான்றிதழில் மாற்றித் தர முடியாது. நிலுவையில் படித்துவரும் மாணவர்களின் சான்றிதழில் அவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவதாகவும், அவர்களுக்கு வழிகாட்டும் அந்தஸ்து தரப்படாது என்றும் பல்கலைக்கழகம் நிர்வாகம் தெரிவிப்பதாகவும், ஆனால், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x