

ஈரோடு
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ''ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு நடத்தப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், இலவசப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகள் அரசு சார்பில் சிறப்பான முறையில் அளிக்கப்படுகின்றன.
அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு விட்டன. 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 2017-18 ஆம் ஆண்டுகளில் மடிக்கணினி வழங்கப்படாத பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்படும். இதுதொடர்பாக முதல்வர் விரைவில் ஆணையை வெளியிட உள்ளார்.
நேற்று நடைபெற்ற முதிநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் நிறையப் பிரச்சினைகள் நடந்ததாகக் கூறப்படுகின்றன. அப்படி எதுவும் என் காதுக்கு வரவில்லை. பத்திரிகையாளர்களின் கவனத்துக்கு வந்தால் என்னிடம் தெரிவிக்கலாம்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் 154 தேர்வு மையங்களில் சுமார் 60 ஆயிரம் பட்டதாரிகள் தேர்வில் பங்கேற்றனர். ஆசிரியர் தேர்வு முதல்முறையாக கணினி வழியில் நடப்பதால் முறைகேடுகளை தவிர்க்க அனைத்து மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும், தேர்வர்களுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.