

கோவை
72 ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இருந்த காஷ்மீர் பிரச்சினையை 72 மணிநேரத்தில் சட்டம் நிறைவேற்றி தீர்வு காணப்பட்டதாக முன்னாள் மத்திய இணையமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று (செப்.27) நடைபெற்ற பாஜக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு இந்தியாவை பிரதமர் மோடி மாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், "72 ஆண்டுகளாக முடிக்கப்படாத காஷ்மீர் பிரச்சினையை 72 மணிநேரத்தில் முடித்துக் கொடுத்த பெருமை பிரதமர் மோடியையே சாரும்," என தெரிவித்தார்.
முன்னதாக, கூடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், நீட் தேர்வு நடைபெறாமல் இருந்திருந்தால் ஆள்மாறாட்டம் அதிகரித்திருக்கும் எனவும், தேர்வு இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
"ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி தேர்ச்சி பெறுபவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? குடிசையில் வாழும் யாராவது ஆள்மாறாட்டம் செய்ததாக சொல்ல முடியுமா? எல்லோரும் வசதி படைத்தவர்கள், செல்வாக்கு படைத்தவர்கள் தான் செய்கின்றனர். அப்படிப்பட்ட நபர்களைக் கண்டுபிடித்து தண்டிப்பதில் எந்த தவறும் இல்லை. தேர்வு முறைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும். நீட் தேர்வு வராமல் இருந்திருந்தால், இதுபோல எத்தனை ஆயிரக்கணக்கான பேர் தவறு செய்திருக்க முடியும்,"
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.