Published : 28 Sep 2019 09:26 AM
Last Updated : 28 Sep 2019 09:26 AM

90 மணி நேரம் 1,200 கி.மீ சைக்கிள் பயணம்: சவால்களை சாதனையாக்கிய இளைஞர்

க.சக்திவேல்

சிறுவயதில் சைக்கிள் மீது தனக்கிருந்த ஆர்வத்தால் இன்று சர்வதேச அளவில் சாதித்துள்ளார் கோவை கணபதியில் வசித்து வரும் சிவபாலாஜி (36). தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றிவரும் அவரை சந்தித்தோம். “உடற்பயிற்சிக்காக 2016-ம் ஆண்டு சாதாரண சைக்கிளை ரூ.5 ஆயிரத்துக்கு வாங்கி ஓட்டத் தொடங்கினேன். ஏதேச்சையாக, 2017 ஆகஸ்ட் 15-ம் தேதி, கோவையில் சைக்கிள் போட்டி நடப்பது தெரியவந்தது. முயற்சி செய்து பார்க்கலாம் என முதலில் 50 கி.மீ ஓட்டுவதற்கு முன்பதிவு செய்தேன். போட்டியில் கலந்துகொண்ட பிறகு, 100 கிலோ மீட்டர் ஓட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு, 100 கிலோ மீட்டரையும் ஓட்டி முடித்தேன். அதன் பிறகு, போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் நடக்கும் போட்டிகள் குறித்தும், போட்டி நுணுக்கங்கள் குறித்தும் அறிந்துகொண்டேன்” என்றார்.

நீண்ட தூர சைக்கிளிங் போட்டியை பொறுத்தவரை போட்டி நடக்கும்போது காற்றடித்தாலும், மழை பெய்தாலும், கடுங்குளிராக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் போட்டியை நிறைவு செய்ய வேண்டும். உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் தயாராக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். சோர்வடையாமல் தொடர்ந்து கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் நடைபெற்ற 200 கி.மீ, 300 கி.மீ, 400 கி.மீ, 600 கி.மீ, 1,000 கி.மீ என பல்வேறு போட்டிகளை நிறைவு செய்ததால், நெடுந்தூர சைக்கிள் மாரத்தானில் கலந்துகொள்பவர்களுக்கான SUPER RANDONNEURS பட்டத்தைப் பெற்றார் சிவபாலாஜி. இதன்மூலம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2019 ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பாரிஸில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது நீண்ட தூர சைக்கிளிங் போட்டியாளர்களின் கனவுகளில் ஒன்று. 125 ஆண்டுகள் பழமையான இந்த போட்டியில், கடந்த ஆண்டு 60 நாடுகளில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தியாவில் இருந்து 320 பேர் கலந்துகொண்டனர். அதில் ஒருவராக கலந்துகொண்டார் சிவபாலாஜி.

சந்தித்த சவால்கள்…

போட்டி தூரமான 1,200 கிலோ மீட்டரை 90 மணி நேரத்துக்குள் சென்றடைய வேண்டும். பாரிஸில் இரவு 9.30 மணி வரை சூரியன் மறையாது என்பதால் வெயில் இருக்கும். போட்டி நடக்கும் பாதையில் ஏற்ற, இறக்கங்கள் அதிகம். இலக்கு தூரத்துக்குள் Elevation gain மட்டும் 11,800 மீ. அதாவது, ஊட்டி மலைப்பாதையை தொடர்ந்து 6 முறை ஏறுவதைப் போன்ற ஏற்றங்களை கடக்க வேண்டும். நம் நாட்டு உணவு வகைகள் கிடைக்காது. இரவில் 4 டிகிரி செல்சியஸ், பகலில் 34 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலையும் இருக்கும். இலக்கு தூரத்துக்குள் ஒவ்வொரு நூறு கிலோமீட்டரையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடைந்திருக்க வேண்டும். இதற்காக சராசரியாக 20 முதல் 25 கி.மீ வேகத்திலாவது பயணிக்க வேண்டும்.

கைகொடுத்த மலையேற்றம்..

“போட்டி தொடங்கி 690 கிலோ மீட்டரை சென்றடைந்தபோது, காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் 2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. போட்டியை நிறைவு செய்ய முடியாதோ என்ற எண்ணம் எழுந்தாலும், தொடர் உழைப்பு வீண்போகக்கூடாது என்ற மன உறுதியோடு மீண்டும் பயணத்தை தொடங்கினேன். 90 மணி நேரத்தில் மொத்தம் 9 மணி நேரம் மட்டுமே தூங்கினேன். இறுதியில், 87 மணி நேரம் 56 விநாடிகளில் பந்தய தூரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தேன். போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக கோவையில் இருந்து ஊட்டி, கொடைக்கானல் மலைகளுக்கு வாரம் ஒருமுறை என 6 மாதங்கள் தொடர்ச்சியாக சைக்கிளில் சென்று பயிற்சிபெற்ற அனுபவமே சவால்களை எதிர்கொள்ள உதவியாக இருந்தது” என்றார் சிவபாலாஜி.

அடுத்த இலக்கு

பாரிஸ் செல்ல போக்குவரத்து செலவு, போட்டிக்கேற்ற தரமான உடை, சைக்கிளை தயார் செய்வது என ரூ.2.40 லட்சம் செலவாகியுள்ளது. இந்த செலவை சமாளிக்க சிவபாலாஜியின் நண்பர்கள், பணியாற்றும் நிறுவனத்தினர்
மற்றும் சில நிறுவனங்கள் உதவியுள்ளன. அடுத்த இலக்கு என்ன என சிவபாலாஜியிடம் கேட்டதற்கு, “வரும் 2020-ம் ஆண்டு இத்தாலியில் நடைபெறும் 1,600 கி.மீ, லண்டனில் 2021-ம் ஆண்டு நடைபெறும் 1,500 கி.மீ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ‘ரேஸ் அக்ராஸ் அமெரிக்கா’ எனும் 5,000 கி.மீ போட்டியில் ஒருமுறையாவது கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது இலக்கு. தன்னார்வலர்கள் உதவினால் மட்டும் இது சாத்தியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x