

சென்னை
சென்னையில் 54-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழா அக்டோபர் 1-ம் தேதி தொடங்குகிறது.
இராமலிங்கர் பணி மன்றம், ஏவிஎம் அறக்கட்டளையுடன் இணைந்து, 54-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழாவை மயிலாப்பூர் ஏவிஎம் இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரை நடத்துகிறது. அக்டோபர் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமார் பங்கேற்று பேசுகிறார். 2-ம் தேதி காலை 9 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு இராம லிங்கர் பணிமன்றத் தலைவர் ம.மாணிக்கம் தலைமையில் மாலை அணிவிக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து ஏவிஎம் இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு, 'காந்திஜியின் பன்முகப் பார்வை' என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் மூத்த வழக்கறிஞர் த.இராமலிங்கம் பேசவுள்ளார். அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மேற்குவங்க மாநில முன்னாள் தலைமை செயலர் பி.எஸ்.ராகவன் பேசுகிறார்.
3-ம் தேதி காலை 10 மணிக்கு, ‘தேசப்பிதாவை போற்றும் பேசாப் பொருட்கள்’ என்ற தலைப்பில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கவியரங்கம் நடைபெற உள்ளது. அதில் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் வ.வே.சுப்பிரமணியம் உரையாற்று கிறார். மாலை 6 மணிக்கு, இராமலிங்கர் பணிமன்ற போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அருட்செல்வர் ந.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதில் பேராசிரியர் கா.செல்லப்பன் நூலை வெளியிட, பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் பெற்றுக்கொள்கிறார்.
இல.கணேசன் உரை
4-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் சன்மார்க்க கருத் தரங்கில், பொற்றாமரை அமைப் பின் தலைவர் இல.கணேசன் உரையாற்றுகிறார். அன்று மாலை 6 மணிக்கு நடை பெறும் நிகழ்ச்சியில், ‘அருட் செல்வர் சுவடுகள் மாறாத பயணம்’ என்ற நூலை தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தி வெளியிட, ஏவிஎம் குழும தலைவர் ஏவிஎம் சரவணன் பெற்றுக்கொள்கிறார்.
5-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்குறள் தொடர்பான நூலை பேரூராதீனம், தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் வெளியிட, தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் பெற்றுக்கொள்கிறார். மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில், ‘வள்ளலார் மறைந்தது எப்படி?’ என்ற நூலை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் வெளியிட, சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் ம.மாணிக்கம் பெற்றுக் கொள்கிறார்.