

தேனி
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் மாணவர் உதித்சூர்யா வாக்குமூலத்தில் தெரிவித்த விபரங்கள் வெவ்வேறாக உள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நீட்தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து சிபிசிஐடி.போலீசார் முதற்கட்ட விசாரணையை முடித்துள்ளனர்.
இதில் மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன், தாயார் கயல்விழி, முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
இவர்கள் அளித்த வாக்குமூலம் முழுமையாக பெறப்பட்டன. தேவைப்படும் போது மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உதித்சூர்யா, டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவரின் தாயார் கயல்விழி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஒவ்வொருவரின் வாக்குமூலத்திலும் மாறுபாடு, சந்தேகத்திற்கு இடமான விஷயங்கள் இருக்கிறதா என்று சிபிசிஐடி.போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது டீன் ராஜேந்திரன், மாணவர் உதித்சூர்யா வாக்குமூலங்களில் மாறுபாடு இருப்பது தெரிய வந்துள்ளது.
உதித்சூர்யாவோ தேனி மருத்துவக்கல்லூரிக்கு தானே வந்து சேர்க்கையில் பங்கேற்றதாகக் கூறியுள்ளார். ஆனால் டீன் ராஜேந்திரனோ, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதால் அதற்கேற்ப அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் தேனி மருத்துவ கல்லூரி சேர்க்கையில் ஆரம்பம் முதலே குளறுபடியான தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. எனவே சான்றிதழை சரிபார்த்த குழுவினர், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரையும் அடுத்த கட்டமாக விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.