

மதுரை
நக்கீரன் ஆசிரியர் கோபால் மீதான இரு அவதூறு வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக 2012-ல் அவதூறாக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது அறந்தாங்கி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நக்கீரன் கோபால் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக தமிழ்நாடு முழுவதும் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ஒரே விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இதே விவகாரம் தொடர்பாக அறந்தாங்கி போலீஸார் என் மீது வழக்கு பதிவு செ்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுதார் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். பின்னர், திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதேபோல், ஏர்வாடி தர்கா செய்தி தொடர்பாக நக்கீரன் கோபால் மீது ஏர்வாடி தர்கா தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கு ராமநாதபுரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நக்கீரன் கோபால் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.