Last Updated : 27 Sep, 2019 05:32 PM

 

Published : 27 Sep 2019 05:32 PM
Last Updated : 27 Sep 2019 05:32 PM

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக 2 லட்சம் பேர் கருத்து: உயர் நீதிமன்ற கிளையில் மத்திய அரசு தகவல்

மதுரை

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆக.15 வரை 2 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர் என உயர் நீதிமன்ற கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பகவத்சிங், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை அரசியலமைப்பு அட்டவணை அங்கீகரித்துள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். பின்னர் அந்தந்த மாநில மக்களிடம் கருத்து கேட்டறிந்து தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், தீபக்நாதன் என்பவர், "தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை பார்வையற்றவர்கள், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் முழுமையாக படிப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பார்வையற்றோர், செவித்திறன் குறைபாடுடையவர்களும் தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை படிக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்" என மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை ஆங்கிலம், இந்தியில் வழங்கப்பட்டுள்ளது. பிற மாநில மொழிகளில் கல்வி கொள்கையின் சுருக்கம் வெளியிடப்பட்டுள்ளது. வரைவு அறிக்கையை முழுமையாக அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து வழங்க வேண்டியதில்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் "தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆக.15 வரை தனி நபர்கள் கருத்துகளை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

அந்த அவகாசத்தில் 2 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பார்வையற்றவர்கள் உட்பட மாற்றுத்திறனாளிகளும் தேசிய கல்விக் கொள்கையை அறிந்து கொள்ளும் வகையில் ஒலி வடிவத்திலும் கல்விக் கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் செப். 21-ல் நடத்தப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை தொடர்பாக வரப்பெற்ற கருத்துக்களின் அடிப்படையில் உரிய முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x