

சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் பெருக்குபவர் மற்றும் துப்பரவுப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த எம்.இ. , எம்.டெக். பட்டதாரிககளிடம் நேர்காணல் நடந்தது.
சட்டப்பேரவை செயலகத்தில் பெருக்குபவர் 10 பேர் மற்றும் துப்பரவுப் பணியாளர்கள் 4 பேர் என மொத்தம் 14 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு கல்வித் தகுதி குறிப்பிடப்படாமல், உடல் வலிமையோடு இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் இட ஒதுக்கீடு அடிப்பையில் காலிப் பணியிடங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் சம்பள விகிதம் 15,700 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக ஊதிய உயர்வு 50 ஆயிரம் வரை பெற முடியும். இதற்கு 4 ஆயிரத்து 607 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கல்வித் தகுதியே தேவைப்படாத காலிப் பணியிடத்திற்கு பொறியியல், பொறியியல் மேற்படிப்பு படித்த பட்டதாரிகள் விண்ணப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விண்ணப்பித்தவர்களில் 677 பேருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 3 ஆயிரத்து 930 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இன்மையால் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக் படித்தவர்கள்கூட துப்பரவுப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்ற விமர்சனம் எழுந்தது. துப்புரவு மற்றும் பெருக்குபவர் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தலைமைச் செயலகத்தில் கடந்த 23-ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது.
நாளொன்றுக்கு 100 பேர் என்ற அடிப்படையில் 40 நாட்கள் நேர்காணல் நடைபெறவுள்ளது. சமீபத்தில் ரயில்வே கலாசிப் பணிக்கு ஐஐடியில் எம்.டெக் படித்த ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பொதுவாக அரசு வேலை என்பது ஒவ்வொருவருடைய கனவு. அரசு வேலைவாய்ப்பில் போட்டி அதிகம். அதற்காக இதுபோன்ற வேலைக்கு மேற்படிப்பு படித்த பட்டதாரிகள் எப்படி வருகிறார்கள் என்று கேட்கலாம்.
பெருக்கும் வேலைக்கோ, துப்புரவுப் பணிக்கோ அல்லது ரயில்வே கலாசிப் பணிக்கோ வரவேண்டும் என்பதற்காக அவர்கள் வருவதில்லை. இது அரசாங்கப் பணியில் நுழைவதற்கான ஒரு நுழைவு வாயிலாகப் பார்க்கிறார்கள். அரசுப் பணிக்குள் வந்துவிட்டால் அடுத்து முக்கியப் பணிக்கான தேர்வு வரும்போது அரசுப் பணியில் இருப்பதை வைத்து எளிதாக தகுதி பெற்றுவிடலாம் என்பதே அவர்கள் எண்ணம்.
இது காவல்துறை, மின்வாரியம், மாநகராட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் நடப்பதுதான். ஆனால், இதற்காக சாதாரணப் படிப்பே இல்லாத ஒருவர் இடத்தையா இவர்கள் ஆக்கிரமித்து நுழைய வேண்டும் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி” என்று தெரிவித்தார்.
“அரசுப் பணியில் நுழைய வேண்டும் என்பதற்காக அதீத தகுதி உள்ளவர்கள் சாதாரண மக்களுக்கான இடத்துக்கு போட்டியிடுவதைத் தடுக்க, சிறிய பணியிடங்களுக்கு அதற்குரிய தகுதியுள்ளவர்களைத் தேர்வு செய்யும் முறையை கட்டாயமாக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.