

சென்னை
நீட் தேர்வை மத்திய அரசு தான் நடத்துகிறது எனவும், ஆள்மாறாட்டம் விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் நேற்றிரவு மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக ,சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதை மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனும் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் இன்று (செப்.27) செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "நீட் தேர்வை தமிழக அரசு நடத்தவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தேர்வு முகமைதான் நடத்துகிறது. இந்த விவகாரத்தில் தவறிழைப்பவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்மந்தப்பட்ட மாணவர் உதித் சூர்யா, அவாது தந்தை ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வேறு யாராவது ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் படிக்கின்றார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சிபிசிஐடி முழுமையாக விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் சிபிசிஐடி எடுக்கும்," என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.