காமராஜர் நகர் இடைத்தேர்தல்: பாஜக தனித்துப் போட்டியா? என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவித்ததால் அதிருப்தி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

புதுச்சேரி

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதால் அக்கட்சி நிர்வாகிகள் பாஜக அலுவலகத்துக்குச் சென்று சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதை பாஜக நிர்வாகிகள் ஏற்காததால் திரும்பி சென்றனர். தேசிய தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த வைத்திலிங்கம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதையடுத்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். காலியாக உள்ள காம்ராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள நிலையில், வேட்பாளரை இறுதி செய்ய முதல்வர் நாராயணசாமி மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இரு தரப்பினரும் தங்களின் ஆதரவாளர்களை வேட்பாளராக்க முயற்சித்து வருகின்றனர்.

இதனிடையே புதுச்சேரியில் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கிடையே கூட்டணி குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். இதையடுத்து காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதரவு தெரிவிப்பதாக முதல்வரும் துணைமுதல்வரும் அறிவித்தனர்.

அதிமுக, பாஜக தரப்பில் விருப்ப மனு பெற்றிருந்த சூழலில் தேர்தல் பற்றி கருத்தே தெரிவிக்காத என்.ஆர்.காங்கிரஸ் சிலரின் வற்புறுத்லால் களத்தில் இறங்கியதாக பாஜக தரப்பு கோபமடைந்தது.

கூட்டணியில் உள்ள பாஜகவை கலந்தாலோசிக்காமல் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதாக தெரிவித்து பாஜக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று (செப்.27) நேர்காணல் நடத்துவதாக பாஜக முடிவு எடுத்து அனைவரையும் அழைத்தது.

பாஜக சார்பில் நேர்காணல் நடத்துவதற்கு முன்பாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் பாஜக அலுவலகத்திற்கு வந்து மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகளிடம் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறும், நேர்காணலை நடத்த வேண்டாம் எனவும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. அதையடுத்து அவர் திரும்பி சென்றார்.

இதனிடையே நேர்காணல் நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் சாமிநாதன், "காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தனர். அதனால் பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தோம். தேசிய தலைமை அனுமதியின் பேரில் விருப்ப மனு பெற்றோம்.

தற்போது திடீரென்று எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் செயல்பட்டுள்ளனர். நாங்கள் விருப்ப மனு பெற்றவர்களிடம் நேர்காணல் நடத்தியுள்ளோம். அவ்விவரத்தை மேலிடத்துக்கு தருவோம். என்.ஆர்.காங்கிரஸாரிடம் தேசிய தலைமையில் பேச சொல்லிவிட்டோம். இவ்விவரத்தை நாங்களும் சொல்லியுள்ளோம். இறுதி தேசிய தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும்," என்று தெரிவித்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணியிலுள்ள பாஜகவை என்.ஆர்.காங்கிரஸும், அதிமுகவும் வெளிப்படையாகவே புறக்கணிப்பதாகவும் பாஜக தரப்பில் வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகின்றனர்.

செ.ஞானபிரகாஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in