Published : 27 Sep 2019 02:20 PM
Last Updated : 27 Sep 2019 02:20 PM

பரம்பிக்குளம் - ஆழியாறு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும்; கே.எஸ்.அழகிரி

சென்னை

பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்சினை குறித்து தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (செப்.27) வெளியிட்ட அறிக்கையில், "பரம்பிக்குளம் - ஆழியாறு நீர் பங்கீட்டு ஒப்பந்த மறு ஆய்வு குறித்த தமிழக - கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இதுகுறித்து தீர்வு காண இரு மாநிலங்கள் சார்பிலும் 5 பேர் என 10 பேர் கொண்ட சிறப்பு பொதுக்குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டு, ஆந்திர மாநிலம் உருவானதன் காரணமாக, தனது நீர்வளத்துறையை பெருமளவில் இழக்கிற நிலை ஏற்பட்டது. முக்கிய நதிகளான கோதாவரியும், கிருஷ்ணாவும் ஆந்திர மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டன. சென்னை மாகாணத்திற்குக் கிடைத்த ஒரே நதி காவிரி தான்.

எனவே, தமிழகத்தில் நீர் வளத்தைப் பெருக்கி, நீர் பாசனத்தை அதிகப்படுத்தி, விவசாய உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வகையில் பல திட்டங்கள் காமராஜர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. இரண்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியத் திட்டம் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம். இது கிட்டத்தட்ட ரூபாய் 30 கோடி செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரத்தை வழங்கும் பல நோக்குத் திட்டமாகும்.

பரம்பிக்குளம் என்பது நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், துணைக்கடவு, தேக்கடி என ஐந்து ஆறுகளையும், ஆழியாறு ஆற்றையும் சேர்த்து பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ஆறுகள் 3750 அடி முதல் 1050 அடி வரை உயரமான இடங்களில் இருப்பதால் இவற்றின் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யவும் முடியும்.

இத்திட்டத்தினால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர்களுக்கு பாசன வசதி கிடைப்பதுடன், தமிழ்நாடு மின்சார இணையத்திற்கு 1.8 லட்சம் கிலோ வாட் மின்சக்தி கூடுதலாகக் கிடைக்கும். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய வட்டங்களுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி வழங்குகிறது. பெரும்பாலும் புஞ்சை நில சாகுபடிக்கு இந்நீர் விடப்படுகிறது.

தமிழகத்துக்குப் பயனுள்ள இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் கேரள அரசுடன் ஓர் உடன்பாடு ஏற்படுத்துவது அவசியமானது. 1957 அக்டோபரில் திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுடன் அன்றைய முதல்வர் காமராஜர் விவாதித்தார். இத்திட்டத்தைத் தொடங்குவதற்காக கேரள அரசின் சம்மதத்தையும் காமராஜர் பெற்றார்.

பரம்பிக்குளம் - ஆழியாறு அணை ஒப்பந்தம் சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் முடிந்து கோவையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அதற்கு காமராஜர் செலவிட்ட காலம் ஒருநாள் தான். அன்று கேரள முதல்வர் பனம்பள்ளி கோவிந்த மேனன் உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று முதல்வர் காமராஜரின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்தனர். காமராஜரின் உயர்ந்த தலைமைப் பண்புக்கு இருந்த மதிப்பு, மரியாதையின் அடிப்படையில் அண்டை மாநில அரசுகள் இணங்கி 1 மணிநேரத்தில் உடன்பாடு கையெழுத்தாகி சாதனை படைத்ததை இன்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆனால், பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம் குறித்து சில பிரச்சினைகள் எழுந்த போது, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 1970 இல் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியும், கேரள முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரி பாட்டும் இணைந்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். மீண்டும் 1988 இல் மறுஆய்வு செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று தமிழக முதல்வர் கருணாநிதி ஒப்பந்த மறுஆய்வுக்கான ஆவணங்களை வழங்கினார். அதை கேரள முதல்வரும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் தொடர்ந்து பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், பிறகு வந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரச்சினைகளுக்கான முடிவு எட்டப்படவில்லை.

இச்சூழலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் சந்தித்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண 10 பேர் கொண்ட குழு அமைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் என்பது இரு மாநிலம் சம்மந்தப்பட்டது. இப்பிரச்சினையில் தமிழக அரசு முடிவெடுப்பதற்கு முன்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனையை பெற்றிருக்க வேண்டும். எந்தவிதமான ஆலோசனையும் பெறாமல் இப்பிரச்சினையை அணுகுவதனால் எதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது.

இதுபோன்ற ஜீவாதாரமான பிரச்சினைகளில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், குறிப்பாக பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்சினையில் நீதிமன்றத்தை அணுகி, உரிமைக்காக போராடிய அமைப்புகளை அழைத்து கருத்துக்களை தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும்.

ஆனால், எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு தன்னிச்சையாக தமிழக முதல்வர், கேரள முதல்வரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய அச்சத்தைப் போக்க ஒரே தீர்வு தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இப்பிரச்சினை குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்," என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x