Published : 27 Sep 2019 02:06 PM
Last Updated : 27 Sep 2019 02:06 PM

2023-க்குள் அனைத்து ஏழைகளுக்கும் கான்க்ரீட் வீடு: ஓபிஎஸ் உறுதி

சென்னை

2023-க்குள் அனைத்து ஏழைகளுக்கும் கான்க்ரீட் வீடு வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

சென்னை, வள்ளீஸ்வரன் தோட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்துக்குச் சொந்தமான 40 ஆண்டுகள் பழமையான வீடுகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ஒரு மாதத்துக்குள் இங்குள்ள வீடுகள் இடிக்கப்பட்டு, ஒரு வருட காலத்துக்குள் கான்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இங்கு வசிக்கும் அனைவருக்கும் இதில் முன்னுரிமை வழங்கப்படும்.

அனைவருக்கும் வீடு வசதித் திட்டத்தின் கீழ், 2023-க்குள் ரூ.75 ஆயிரம் கோடி என்ற மதிப்பில், அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அதன் அடிப்படையில் 6 லட்சம் வீடுகள், தரமாகவும் நவீனமாகவும் கட்டப்பட்டு, ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மக்களுக்கு 2023-க்குள் கான்க்ரீட் வீடுகள் வழங்கப்படும்.

கடைசிக்கட்ட வேலைகள் இருப்பதாலேயே சில வீடுகளை வழங்கத் தாமதமாகிறது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தல்களில் அதிமுக சார்பில், வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. எங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளின் ஒத்துழைப்பை நாங்கள் கோரியுள்ளோம். அனைவரும் எங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இரு தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெறும்’’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x