பிராட்வேயில் மேற்கூரை இடிந்து சிறுவன் உயிரிழப்பு: டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் முறையீடு

பிராட்வேயில் மேற்கூரை இடிந்து சிறுவன் உயிரிழப்பு: டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் முறையீடு
Updated on
1 min read

சென்னை

பிராட்வே பகுதியில் பழைய வீட்டின் மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதை மனுவாகத் தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார்.

சென்னை பிராட்வே சண்முகராயன் தெருவில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மிகவும் பழமையான குடியிருப்புகள் உள்ளன. கடந்த புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சுரேஷ் என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷின் 8 வயது மகன் உயிரிழந்தான்.

இதேபோன்று கடந்த வாரம் பெய்த பெருமழையில் மண்ணடியில் பழைய வீடு இடிந்து விழுந்ததில் ஜெரினா பேகம் என்கிற பெண் உயிரிழந்தார். பிராட்வேயில் பராமரிக்கப்படாத பழைய கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. ஏழைகளும் வசதியில்லாத மக்களும் இங்கு குடியிருந்து வருகின்றனர். திடீர் மழை, புயல் பேரிடர் காலங்களில் இவை இடிந்து விழுவதால் விபத்து ஏற்படுகிறது.

ஒரே வாரத்தில் வீட்டின் சுவர் விழுந்து 50 வயதுப் பெண்ணும், 8 வயது சிறுவனும் உயிரிழந்தது சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வு முன்பு முறையீடு செய்தார்.

''இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். பராமரிக்காமல் இருக்கும் ஆபத்தான பழைய கட்டிடங்களை இடிக்க மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாத காரணத்தால்தான் சிறுவனின் உயிரிழப்பு நிகழ்ந்தது'' என டிராஃபிக் ராமசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in