

புதிய தலைமைச் செயலக கட்டிடம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ரகுபதி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2011-ல் அதிமுக அரசு பொறுப்பேற்றதும் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை பல் நோக்கு மருத்துவமனையாக மாற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மேலும், கட்டிட பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம், 2011-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த ஏப்ரலில் முடிவடைந்தது. இதையடுத்து, 3 மாதங்களுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றுடன் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததால், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.