Published : 27 Sep 2019 12:28 PM
Last Updated : 27 Sep 2019 12:28 PM

இலங்கையில் பிள்ளையார் கோயில் அருகில் பவுத்த பிக்கு உடலுக்கு ஈமச் சடங்கு: வைகோ கண்டனம்

சென்னை

இலங்கையில் பிள்ளையார் கோயில் அருகில், பவுத்த பிக்கு உடலுக்கு ஈமச் சடங்கு செய்யப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (செப்.27) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு, பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இலங்கை அரசால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் போக, எஞ்சி உள்ள தமிழர்களை, கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுத் தாக்குதல்கள் மூலம் அழித்து ஒழிப்பதில் இலங்கை அரசும், பவுத்த மதவாதக் கும்பலும் கரம் கோத்துக்கொண்டு செயல்படுகின்றன.

தமிழர் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட ராணுவ முகாம்கள், ஈழத் தமிழர்களைக் கண்காணிப்பு வளைத்துக்குள் தள்ளி இருப்பது மட்டுமின்றி, ராணுவத்தினரின் அத்துமீறல்களும் தொடருகின்றன. தமிழ் இளைஞர்களை சித்ரவதைகளுக்கு உள்ளாக்குவதும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதும், அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன.

தெருக்களுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டுதல், தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களைப் பறித்துக்கொண்டு, அவற்றில் பவுத்த விகாரைகளை எழுப்புதல், தமிழர்களின் ஆலயங்களை அழித்து ஒழித்தல் போன்றவற்றின் மூலம் தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளங்களை, சுவடு தெரியாமல் அழிக்கின்ற வேலைகளை இலங்கை அரசு, ராணுவத்தின் துணை கொண்டு செயல்படுத்தி வருகின்றது.

முல்லைத் தீவு மாவட்டத்தில், பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயிலை இலங்கை ராணுவ உதவியுடன் கைப்பற்றிக் கொண்ட சிங்கள பவுத்த பிக்குக் கொலம்ப மேதாலங்க தேரர் என்பவர், அந்த ஆலயத்தை 'குருகந்த் ரஜமஹா' எனும் பவுத்த விகாரையாக மாற்றிக் கொண்டார். இவர், கடந்த செப்டமபர் 21 ஆம் தேதி புற்றுநோய் பாதித்த நிலையில் மரணம் அடைந்தார்.

நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்தில், பவுத்த பிக்குவின் இறுதிக் கிரியைகள் நடைபெற இலங்கை ராணுவம் மற்றும் கடற்படையினர் ஏற்பாடு செய்தனர். இதனைக் கண்டு கொந்தளித்த ஆலய நிர்வாகத்தினர், முல்லைத் தீவு நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இந்நிலையில், சைவ ஆலய மரபுகளை, பண்பாடுகளை மீறி, புனிதமாகக் கருதப்படும் கோயிலுக்குள் பவுத்த பிக்கு உடலுக்கு ஈமச் சடங்கு செய்வதற்கு இலங்கை ராணுவத்தினர் முயல்வதைக் கண்டு கொதித்துப்போன தமிழ் மக்கள் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை முற்றுகை இட்டனர்.

பவுத்த பிக்கு கொலம்ப மேதாலங்க தேரர் உடலை, ராணுவ முகாம் அருகில், கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத் தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிங்கள இனவெறி பவுத்த அமைப்பான பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானகார சார தேரர் உள்ளிட்ட பவுத்த பிக்குகள், முல்லைத் தீவு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என்றும் திட்டமிட்டவாறு நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்தில்தான் பிக்குவின் உடலை வைத்து இறுதி கிரியைகள் செய்வோம் என்றும் அடவாடியாக இருந்தனர். முல்லைத் தீவு நீதிமன்ற உத்தரவைக் கிழித்து எறிந்துவிட்டு, பவுத்த பிக்கு மேதலாங்க தேரரின் உடலை ஆலயத்தின் கேணி அருகில் வைத்து ஈமக்கிரியை செய்து எரித்துள்ளனர்.

இந்நிகழ்வு, உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் நெருப்பை அள்ளிக்கொட்டி இருக்கிறது. இலங்கை அரசின் உதவியோடு பவுத்த பிக்குகள் நடத்தி இருக்கும் இத்தகைய அக்கிரமங்களைப் பன்னாட்டு சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

இனப்படுகொலைக்கு உள்ளாகி நீதி வேண்டி நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மீது நடத்தப்பட்டு சிங்களக் காடையர்களின் கட்டமைக்கப்பட்ட இனவாத பண்பாட்டுத் தாக்குதலை நாகரிக மனித சமூகம் ஏற்கவே முடியாது.

தமிழர்களைக் கொன்று குவித்த அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ அதிகாரிகள் மீது இனப்படுகொலை வழக்கு பதிவு செய்து, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்காமல் இருப்பதால்தான், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இத்தகையப் பண்பாட்டு அழிப்பு நடவடிக்கைகள் மேலோங்கி வருகின்றன.

இலங்கை என்பது இருவேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு. சிங்களக் காடையர்களோடு தமிழ் மக்கள் ஒருபோதும் இணைந்து வாழ முடியாது என்பதற்கு முல்லைத் தீவு மாவட்டத்தில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நடந்த இந்தக் கொடூர நிகழ்வே சான்று ஆகும்.

இந்தியாவில் இந்துமதக் காவலர்களாக அடையாளம் தரித்துக்கொண்டு இருக்கும் பாஜக அரசு, இலங்கையில் இந்து கோயில் வளாகத்தில் பவுத்த பிக்குவின் உடல் எரியூட்டப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்காமல், மௌனமாக வேடிக்கை பார்ப்பது பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி இருக்கின்றது.

2011 ஜூன் 1 ஆம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடந்த ஈழத்தமிழர்கள் மாநாட்டில், இலங்கை இனப்படுகொலைக்கு ஒரே தீர்வு பொது வாக்கெடுப்பு ஒன்றுதான் என்ற கருத்தை முதன்முதலாக நான் முன்வைத்தேன்.

1995 ஆம் ஆண்டு திருச்சியில், மதிமுக நடத்திய முதல் மாநில மாநாட்டில் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கருத்தைத்தான் பிரஸ்ஸல்சில் நான் வலியுறுத்தினேன்.

தமிழ் ஈழம் அமைப்பதற்கு ஈழத்தமிழர்களிடமும், உலகம் முழுவதும புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த ஐநா சபையும், பன்னாட்டுச் சமூகமும் இனியாவது முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்," என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x