

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணி மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அமைச்சர் பாண்டியராஜன் இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர் பாஸ்கரன், தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் பாண்டியராஜ், "கீழடி 5-ம் கட்ட அகழாய்வு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்.
11 விதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கீழடியில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றது. கீழடியில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதற்காக ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கீழடி ஆய்வின் மூலம் இந்தியாவின் பல பகுதிகளுடனான தமிழரின் ஒற்றுமை தெரியவந்துள்ளது. ஆனால், கீழடி அகழாய்வை சிலர் அரசியலாக்கப் பார்க்கின்றனர்" என்றார்.
ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி செப்.30-ல் முடிவடைவதாக இருந்தது. தொடர்ந்து 6-ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அகழாய்வில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றுவருவதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியிருக்கிறார்.
கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் கிடைத்த தொல்பொருட்களை பரிசோதித்ததில் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது. இந்த மூன்று அகழாய்வு மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டுக்கப்பட்டன. நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல்துறை மேற்கொண்டதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 33 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
ஆர்வத்தை அதிகரித்த அகழாய்வு..
கடந்த வாரம் நான்காம் கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இதனால் கீழாடி அகழாய்வு மீதான ஆர்வம் தமிழர்களிடம் அதிகரித்துள்ளது.
மேலும் 5-ம் கட்ட அகழாய்வில் இதுவரை மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், இரும்பு பொருட்கள், செப்பு, வெள்ளி காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக், சூதுபவளம், எழுத்தாணி உட்பட 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
அதேபோல் இரட்டை, வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறைகிணறுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், கீழடி அகழாய்வு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.