

சென்னை
பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்பட்டது அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த தொல்.திருமாவளவன், அங்கு இந்தியாவில் நிகழும் சாதிய வன்கொடுமைகள் குறித்துப் பேசினார். மேலும், தன் பிறந்த நாளையும் அமெரிக்காவில் திருமாவளவன் கொண்டாடினார். இந்நிலையில், நேற்றிரவு (செப்.26) விமானம் மூலம் சென்னை திரும்பினார். இதையடுத்து, அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"எந்த மாநிலத்திலும் முனைப்பு காட்டாத நிலையில், தமிழகத்தில் மட்டும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிற விவகாரத்திலும், பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்கும் விவகாரத்திலும் மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்திலும், தமிழ்நாடு முந்திக் கொள்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. புராணங்கள் அல்லது நம்பிக்கைகளை அவரவர் மதம் சார்ந்ததாக பின்பற்ற வேண்டுமே தவிர அதை அனைவருக்குமாகத் திணிப்பது, ஜனநாயகத்திற்குப் புறம்பானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் சட்டபூர்வமான நடவடிக்கை தேவை. இம்மாதிரியான ஆள்மாறாட்டம் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை அரசு உரிய முறைப்படி கவனிக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் மேலும் நிகழாமல் தடுக்க வேண்டும்," என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.