இன்று உலக சுற்றுலா தினம்: ஆண்டுக்கு 80 லட்சம் பேரை ஈர்க்கும் கன்னியாகுமரி

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடல் நடுவே ஓங்கி உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையின் பின்னணியில் காலை நேர தெளிந்த நீலவானில் பிரகாசிக்கும் சூரியனை பார்த்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடல் நடுவே ஓங்கி உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையின் பின்னணியில் காலை நேர தெளிந்த நீலவானில் பிரகாசிக்கும் சூரியனை பார்த்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
Updated on
1 min read

எல்.மோகன்

நாகர்கோவில்

இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரில் 80 சதவீதம் பேர் கன்னியாகுமரி வந்துசெல்வது, சுற்றுலாத் துறை கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம், கன்னியா குமரி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது தெரியவருகிறது.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு விழிப்புணர்வு பயணங்கள், சாதனை நிகழ்வுகள் மேற்கொள்வோரின் எண்ணிக்கை யும் அதிகரித்துள்ளது. இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் சிறப்பு பெற்றதால், இங்குவரும் சுற்றுலா பயணிகளில் பாதிக்கும் மேற்பட்டோர், ஆன்மிக பயணமாகவே வருகின்றனர்.

கடலின் நடுவே சுவாமி விவேகானந்தர் தவம் செய்த பாறையில், 1970 செப்டம்பர் 2-ம் தேதி விவேகானந்தர் மண்டபம் அமைக்கப்பட்டதில் இருந்து, சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு அதிகரித்தது. இதுதவிர காந்திமண்டபம், கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, கட லுக்குள் படகு பயணம், கடற்கரை பேட்டரி கார் பயணம், திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோயில், ராமாயண கண்காட்சி, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் போன்றவை கன்னியாகுமரி சுற்றுலாவை மேம்படச் செய்துள்ளன.

ஆண்டுக்கு சராசரியாக 80 லட்சம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை புரிகின்றனர். இதில் வெளிநாட்டினர் 2 லட்சம் பேர். கடந்த 2016-ம் ஆண்டில் 85,18,486 சுற்றுலா பயணிகள், 2017-ல் 69,07,258 பேர், 2018-ல் 65,67,772 பேர் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்துள்ளனர். நடப்பாண்டு ஜூலை வரை 39,78,673 பேர் வருகை தந்துள்ளனர்.

விடுமுறைகளில் அதிகரிக்கும் கூட்டம்

கன்னியாகுமரி சுற்றுலாத்துறை அலுவலர் நெல்சன் கூறும்போது, “ கோடை விடுமுறை, சபரிமலை விரதம் காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவர். கன்னியாகுமரி மட்டுமின்றி திற்பரப்பு, வட்டக்கோட்டை, மாத்தூர்தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை போன்ற இடங்களையும் பயணி கள் பார்க்கத் தவறுவதில்லை” என்றார் அவர்.

மேலும் வளர்ச்சி அடையும்

குமரிமுனை சுற்றுலா வழிகாட்டி சங்க செயலாளர் பரமார்த்தலிங்கம் கூறும்போது, “கடலுக்குள் ரோப்கார் வசதி, திருவள்ளுவர் பாறை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே இணைப்புபாலம் போன்றவை அமைக்கப்பட்டதும், சுற்றுலா மேலும் வளர்ச்சி அடையும்” என்றார் அவர்.

50-வது ஆண்டாக...

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு 50-வது ஆண்டாக படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதுவரை 6.5 கோடி பேர் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்துள்ளனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தால் 3 சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டுவரும் நிலையில், மேலும் இரு நவீன படகுகளை இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 62,25,577 பேர் படகு பயணம் மேற்கொண்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in