Published : 26 Sep 2019 07:47 PM
Last Updated : 26 Sep 2019 07:47 PM

''என் வழி தனி வழி; சீண்டிப் பார்க்காதீர்கள்'' - வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் பதில்

சென்னை

வானிலை குறித்த தகவல்களை அளித்து பிரபலமானவர் பிரதீப் ஜான். இவர் தனது முகநூலில் தன்னை வம்பிழுக்கவேண்டாம் ‘என் வழி தனி வழி’ என வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கு பதிலளித்துள்ளார்.

வானிலை குறித்த ஆய்வு பல வடிவங்களைக் கடந்து வந்துள்ளது. அச்சு ஊடகங்கள் இருந்தபோது வானொலி மூலமே வானிலை குறித்த தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் காட்சி ஊடகங்கள் வந்த பின்னர் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேரடியாக வானிலை குறித்து பேட்டி அளித்தனர். மேலை நாடுகளில் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை வானிலை மாறும், வருடத்திற்கு 250 நாட்கள் புயல் தாக்கும் நாடுகள் உண்டு.

அங்கெல்லாம் வானிலைக்கு என்றே தனி சேனல்கள் உண்டு. ஆனால் இந்தியாவில் அதற்கான விழிப்புணர்வு கிடையாது. அப்படி அவசியமும் எழவில்லை. காலம் செல்லச்செல்ல விஞ்ஞான வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, இணையதள வளர்ச்சி காரணமாக வானிலை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்பட்டது.

இதற்கு முக்கியக் காரண கர்த்தாக்களுள் ஒருவர் தமிழ்நாடு வெதர்மேன் என முகநூல்வாசிகளால் அன்போடு அழைக்கப்படும் பிரதீப் ஜான். அடிப்படையில் வானிலைக்குச் சம்பந்தமில்லாத மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றும் சராசரி இளைஞர், ஆனால் வானிலை குறித்த அவரது ஆய்வும், அவரது பதிவுகளும் நாள் செல்லச்செல்ல பொதுமக்களிடையே பிரபலமானது.

2015-ம் ஆண்டு சென்னையை உலுக்கிய பெருமழையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் சென்னை மக்களை அடுத்து என்ன நடக்குமோ என வானிலை பக்கம் கவனிக்க வைத்தது. அந்த நேரத்தில் பிரதீப் ஜானின் பதிவுகள் மிகத்துல்லியமாக இருந்ததாலும், பொதுமக்களைப் பீதியடைய வைக்காமல் உண்மையான நிலையைப் பதிவு செய்ததாலும் ஏற்கெனவே பிரபலமடைந்திருந்த பிரதீப் ஜான் மிகப் பிரபலம் ஆனார்.

அவரது முகநூலைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் விரிவடைந்தது. ஊடகங்கள், தொலைக்காட்சிகள் வானிலை ஆய்வு மையத்தின் கருத்துடன் பிரதீப் ஜானின் கருத்தையும் செய்தியாக்கின. ஆனாலும் வானிலை ஆய்வு மையத்துக்கு உள்ள அதே பொறுப்புடனே வானிலை குறித்த தகவல்களை பிரதீப் ஜான் தனது முகநூலில் பதிவு செய்தார்.

பிரச்சினை இருந்தால் மட்டும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்திப்பார்கள். புயல், மழை போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது ஒருநாளில் ஓரிரு முறை சந்திப்பார்கள். ஆனால், பிரதீப் ஜான் தனது வானிலையில் மாற்றம் ஏற்பட்டாலே முகநூலில் பதிவிட்டுவிடுவார். அது பொதுமக்களுக்கு மிகவும் பயனாக இருந்தது. தமிழகத்தின் மாவட்டங்கள், நகரங்கள் என தனித்தனியே இன்று மழை பெய்யலாம், மழை பெய்யாது என துல்லியமாக அவர் கணித்தது சரியாக இருந்தது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் துல்லியமாக எந்த நேரத்தில் எங்கே எந்த அளவுக்கு மழை பெய்யும், அல்லது பெய்யாது என தெளிவாகப் பதிவு செய்வார். அது பலருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. கஜா புயல் நேரத்தில் பலரும் வானிலை என்கிற பெயரில் திடீர் திடீரென்று சிலர் பொதுமக்களைப் பயமுறுத்திய நேரத்தில் மிகத்தெளிவாக புயலின் பாதையைக் கணித்து எந்த இடத்தில் கரையைக் கடக்கும் எவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதைப் பதிவு செய்தார்.

தென்மேற்குப் பருவமழை கேரளாவைப் புரட்டிப்போட்டபோது இவரது பதிவு பலருக்கும் பயன்பட்டது. வெளியூர் செல்பவர்கள் இவரது பதிவைப் பார்த்துவிட்டு செல்லும் அளவுக்குத் துல்லியமாக பீதி ஏற்படுத்தாத அக்கறையுடன் கூடிய பதிவாக இருந்தது. வடகிழக்குப் பருவமழை பொய்த்தபோது அதையும் முன்னரே பதிவிட்டார். மழைப் பொழிவை விரிவாகப்பதிவு செய்தார்.

தமிழ்நாடு வெதர்மேனின் இந்தச் சேவையை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் ரசிக்கவில்லை என்றே சொல்லலாம். வெளியில் கருத்து தெரிவிக்காவிட்டாலும் பிரதீப் ஜானை அலட்சியம் செய்தது பல நிகழ்வுகளில் வெளிப்பட்டது. தனது பதிவுகளில் வானிலை ஆய்வு மையம் கூறுவதைக் குறிப்பிடும் பிரதீப் ஜான் எந்த ஒரு நேரத்திலும் வானிலை ஆய்வு குறித்து ஆருடம் சொல்வதைத் தவிர்த்து வந்தார்.

அதேபோன்று அவரைப் பயன்படுத்தி தவறான தகவல்களை தாங்களாகப் பதிவு செய்து மக்களை பீதியில் தள்ளிய ஊடகங்களையும் தள்ளி வைத்தார். பரபரப்புக்காக வானிலைச் செய்தி அல்ல என்பதில் உறுதியாக இருந்தார்.

வானிலை குறித்துப் பதிவிடும்போது சமீபகாலமாக வானில் கருமேகங்கள் திரண்டு வருவதைக் குறிப்பிட்டு இந்தப் பகுதியில் நல்ல மழை உண்டு தக்காளி சட்னி , சிவப்புத் தக்காளி என குறிப்பிட்டு மழைப்பொழிவை டமால் டுமீல் கட்டாயம் உண்டு என குதூகலத்துடன் குறிப்பிடுவார். அதை பொதுமக்கள் ரசிப்பார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைகழக விழா ஒன்றில் கலந்துகொண்ட வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் பிரதீப் ஜானின் ரெட் தக்காளி, டமால் டுமீல் பதிவைக் கிண்டலடித்துள்ளனர். இதை அரசல் புரசலாக கேள்விப்பட்ட பிரதீப் ஜான் தனது முகநூலில் பொங்கிவிட்டார்.

அவரது பதிவில் இந்திய வானிலை அதிகாரி பேசியதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு வெதர்மேன் என்ற தனது ஃபேஸ்புக் பதிவில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்ட கருத்து:

“நான் எழுதியதில் என்ன தவறு இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக 200 முதல் 300 அழைப்புகள் பல்வேறு ஊடகங்களில் இருந்து வந்தபோதிலும் நான் எடுத்துப் பேசவில்லை. ஏனென்றால் நான் தனியாகச் செயல்பட விரும்புகிறேன். நான் புகழுக்காக எழுதவில்லை. இந்த முகநூல் பக்கம் எனக்குச் சாபமாகவும, ஆசிர்வாதமாகவும் இருக்கிறது. இதில் நான் தொடர்ந்து எழுதுவதால் என்னுடைய உடல்நலம், மன அமைதி, நேரம், குடும்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இழந்திருக்கிறேன்.

என்னை உங்களுக்குத் தெரியுமா?, என்னைப் பற்றி எந்தத் தீர்மானத்துக்கும் வராதீர்கள். உங்கள் பணியை மட்டும் பாருங்கள். நான் இந்திய வானிலை மையத்தின் எந்தப் பணிக்கும் குறுக்கே வந்ததில்லை. இந்திய வானிலை மையம் தவறாகத் தகவல் தெரிவித்துவிட்டது என்று ஒருமுறை கூட இதுவரை நான் பேசியது இல்லை. என்னுடைய பல நேர்காணல்களில் இந்திய வானிலை மையம் அறிவிப்புதான் சிறந்தது, அதிகாரபூர்வமானது, துல்லியமானது என்று ஆதரவாகத்தான் பேசி வந்திருக்கிறேன்.

ஆனால், என்னுடை முகநூல் பக்கத்தில் எனக்குப் பிடித்த வார்த்தைகளில் எழுதுவது என்னுடைய விருப்பம். அதில் நீங்கள் தலையிட வேண்டாம். தவறு கண்டுபிடித்தால், ஐஎம்டி தகவலிலும் என்னால் தவறு கண்டுபிடிக்க முடியும். அதிகாரிகளின் அதிகார வரம்பு என்ன என்று எனக்குத் தெரியும்.

நீங்கள் ஒரு விரலை அடுத்தவரை நோக்கி நீட்டும்போது மூன்று விரல்கள் உங்களைக் குறிவைக்கின்றன என்பதை மறவாதீர்கள். நீலத் தக்காளி, மஞ்சள் தக்காளி, டம் டமால் டுமீல் , பின்னிப் பெடலெடுக்குது, டிஷ் டியூம் டும், இன்னும் புதுப்புது விதங்களில் பதிவு வரும். என் இஷ்டம், இதெல்லாம் ஒரு உணர்வுபூர்வ வெளிப்பாடு. மழை குறித்த தகவல்களை எழுதுவதும், மக்களுக்குத் தருவதும் என்னுடைய உணர்வோடு தொடர்புடையது. அதெல்லாம் உங்களுக்கு எங்கே புரியப்போகிறது?

நீங்கள் பணம் பெற்று ஒரு ஊழியராகப் பணியாற்றுகிறீர்கள். ஆனால், நான் அப்படி அல்ல, மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கில், மக்களைப் பதற்றம் அடையச் செய்யாமல், தேவையான தகவல்களை மட்டும் தருகிறேன். உங்களுடைய பணியில் குறுக்கிடவில்லை”.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அதன் கீழே செப்டம்பர் மாத மழை குறித்த பதிவையும் தவறாது பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்குக் கீழ் நெட்டிசன்கள் அவருக்குப் பரவலாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x