

தூத்துக்குடி
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக ஆதரவளிக்கும் கட்சி அமோக வெற்றிபெறும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (வியாழக்கிழமை) சுவாமி தரிசனம் செய்தபின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக ஆதரவளிக்கும் கட்சி அமோக வெற்றிபெறும்.
இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியை அதிமுகவிடம் பாஜக கேட்கவில்லை. இதுபற்றி கலந்து ஆலோசிக்கவும் இல்லை. பாஜக நாங்குநேரியைக் கேட்டதாகப் பரவிய தகவல் தவறானது.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் தமிழக மக்களுக்கு பயன்தரும். ஆனால் திமுகவிற்கு எந்தப் பயனும் தராது. அதனால்தான் விமர்சிக்கின்றனர்.
தேசப்பிதா மகாத்மா காந்தியும் , நாட்டின் சுதந்திரமும் அனைவருக்கும் பொதுவானது. காங்கிரஸ் மட்டும் அதில் உரிமை கொண்டாட முடியாது. நாட்டின் சுதந்திரத்திற்காக ஆர்.எஸ்.எஸ் முதல் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான்
தமிழக பாஜக., உன்னத நிலை அடைய வேண்டும் என்பதற்காக தமிழக பாஜக தலைவர் பொறுமையாக தேர்வு செய்யப்படுவார்.
உலக நாடுகளின் பொருளாதாரம் மந்தநிலையில் நீடிக்கும்போது இந்தியப் பொருளாதாரம் நிலையாக இருப்பது மகிழ்ச்சிதான்" என்றார்.