தேனி மருத்துவக் கல்லூரியில் சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் ஆய்வு: சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையிலும் சோதனை

தேனி மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்யும் சிபிசிஐடி உயரதிகாரிகள்.
தேனி மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்யும் சிபிசிஐடி உயரதிகாரிகள்.
Updated on
1 min read

தேனி

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரியில் சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சையில் சிக்கிய தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் மற்றும் தாயார் கயல்விழி ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்காக கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன் ஆகியோரும் சிபிசிஐடி அலுவலம் வந்துள்ளனர்.

இந்நிலையில், தேனி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் எந்தெந்தப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன என்பது குறித்து சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார், சிபிசிஐடி டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ் ஆகியோர் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் மாணவர் சேர்க்கையின்போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட அறையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா என்பது குறித்தும் எஸ்பி ஆய்வு செய்து வருகிறார். கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையிலும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

நீட் ஆள்மாறாட்ட வழக்கு புகார் தொடங்கி ஆய்வு வரை..

1. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த 17-ம் தேதி வெளிச்சத்துக்கு வந்தார்.

2. அடுத்த நாள் செப்டம்பர் 18-ல் டீன் ராஜேந்திரன் ஆள்மாறாட்டத்தை உறுதி செய்ததோடு க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாநில சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

3. வழக்கை தேனி டிஎஸ்பி ஈஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரித்தனர்.
4. சென்னை தண்டையார்பேட்டை இல்லத்திலிருந்து மாணவர் உதித் சூர்யா மற்றும் குடும்பத்தினர் மாயமாகினர்.
5. அதேவேளையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மாணவர் உதித் சூர்யா செப்.21-ம் தேதி முன் ஜாமீன் கோரி மனு செய்தார்.
6. வழக்கு செப்.23-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
7. முன் ஜாமீன் மனு செப்.24-ம் தேதி ரத்தானது.
8. செப்டம்பர் 25-ம் தேதி (நேற்று) மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் திருப்பதியில் கைது செய்யப்பட்டார்.
9. தொடர்ந்து செப்டம்பர் 26 (இன்று) அதிகாலையில் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
10. இன்று காலையில் தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசனிடமும் விசாரணை நடைபெற்றது. தற்போது, தேனி மருத்துவக் கல்லூரியில் சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in