

கோவை
கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, இரு மாணவர்கள் மீது புகார் எழுந்துள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சர்ச்சையில் சிக்கிய தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் மற்றும் தாயார் கயல்விழி ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனிடையே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான ஆவணங்களைச் சரிபார்க்கும்படி மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் கோவையில் உள்ள கோவை அரசு மருத்துவக் கல்லூரி, பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கப்பட்ட மாணவர்கள் இருவரின் ஆவணங்களில் உள்ள புகைப்படங்கள் வேறு வேறாக இருப்பது தெரியவந்துள்ளது .
ஒரு மாணவர் மற்றும் மாணவி ஆகிய இருவரின் புகைப்படங்கள் வேறு வேறாக இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து பிஎஸ்ஜி கல்லூரி நிர்வாகம், இதுகுறித்து மருத்துவக் கல்லூரி இயக்குநர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தும்படி சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் புகைப்படமும், தருமபுரியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் புகைப்படமும் மாறி இருப்பதும் அவர்கள் சிபிஎஸ்இ பிரிவில் படித்துத் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்து இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் இதுகுறித்து கோவை பிஎஸ்ஜி கல்லூரி டீன் ராமலிங்கம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அரசு உத்தரவுப்படி, அனுமதிக்கப்பட்ட 150 மாணவர்களின் அனைத்து விதமான சான்றிதழ்களையும் அனைவரிடமும் சரி பார்த்தோம் எனவும் அதில் இருவரது புகைப்படங்கள் மாறுபட்டு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நீட் அட்மிட் கார்டில் இருப்பவர் புகைப்படமும் , தேர்வுக்குழு வழங்கிய அட்மிட் கார்டில் இருந்த புகைப்படமும் மாறுபட்டு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக இருவரது பெற்றோரையும் அழைத்து பேசி உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
முறைகேடு நடைபெற்று இருக்கிறதா இல்லையா என தேர்வுக்குழு தான் நிருபிக்க வேண்டும் என தெரிவித்த அவர், தேர்வுக்குழுவிடம் உள்ள மாணவர்களின் கைரேகைகளைக் கொண்டு சரிபார்க்க மாணவர்கள் இருவரும் சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.
அவர்களிடம் தான் மாணவர்களின் கை ரேகை இருக்கும் எனக்கூறிய அவர், மருத்துவர் படிப்பில் சேர தேர்வுக் குழுவால் கொடுக்கப்பட்ட இரு மாணவர்களின் அலாட்மெண்ட் கடிதத்தில் இருந்த புகைப்படமும், எங்களுக்கு கொடுக்கப்பட்ட புகைப்படமும் ஒரே மாதிரி இருக்கிறது எனவும் டீன் ராமலிங்கம் தெரிவித்தார்.