

கனவுகள் தவிடுபொடியான கோபத்தில் கருணாநிதி மீது வீண்பழியை சுமத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாநிதி கடந்த 20-ம் தேதி அறிவித்தார். இதை அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகத் துறையினர் வரவேற்றுள்ளனர். இந்தச் செய்தியறிந்த தாய்மார்களும், பெரியவர்களும் கருணாநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ஆனால், இந்த நற்செய்தி பாமக நிறுவனர் ராமதாஸுக்கு மட்டும் வேம்பென கசந்திருக்கிறது. கோபம் கொப்பளிக்க கருணாநிதி மீது அவதூறு அர்ச்சனை செய்துள்ளார்.
1971-ல் தமிழக அரசுக்கு ஏற்பட்ட கடுமையான நிதிநிலையை சமாளிக்க தவிர்க்க முடியாத நிலையில் மதுவிலக்கை ஒத்திவைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதுகுறித்து சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் கருணாநிதி உருக்கமாகப் பேசியுள்ளார். அதன் பிறகு 1974-ல் மதுவிலக்கை அமல்படுத்தினார்.
ஆனால், 1981-ல் கள்ளுக்கடைகளை எம்ஜிஆர் திறந்தார். 1982-83-ல் சாராய ஆலைகள் தொடங்க தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. 2003-ல் டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே மது அருந்தும் கூடங்களை ஜெயலலிதா திறந்தார். இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு கருணாநிதி மீது மட்டும் பழியையும் பாவத்தையும் சுமத்தப் பார்க்கிறார்.
1974-ல் மதுவிலக்கை அமல்படுத்திய கருணாநிதி, 2006-ல் ஆட்சிக்கு வந்தவுடன் 1,300 மது அருந்தும் கூடங்களையும், 128 சில்லறை மது விற்பனை கடைகளையும் மூடினார். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் மதுக் கடைகளை திறக்க தடை விதித்தார். மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் ஒரு மணி நேரத்தை குறைத்தார். இவையெல்லாம் ராமதாஸுக்கு தெரியவில்லையா? மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளித்த கருணாநிதியை ஏமாற்றுகிறவர் என்கிறார் ராமதாஸ்.
மகாத்மா காந்திக்குப் பிறகு மதுவிலக்கை கொள்கை தனக்கே சொந்தம் என ராமதாஸ் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதை பிடித்துக்கொண்டே எப்படியாவது ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற நப்பாசையில் இருக்கிறார். அவரது மகன் முதல்வராகி மதுவிலக்குக்காக முதல் கையெழுத்திடுவார் என கற்பனை உலகில் வாழ்ந்து வருகிறார். இந்தக் கனவுகளை எல்லாம் ஒரே நொடியில் தவிடுபொடியாக்கி விட்டாரே என்ற கோபத்தில் கருணாநிதி மீது வீண்பழி சுமத்துகிறார்.
இவ்வாறு அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.