

கோவை
கோவை மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை, மத்திய சிறை வளாகத்தில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கோவை மத்திய சிறைக் காவலர்கள் நேற்று மாலை சிறை வளாகத்தில் வழக்கமான சோதனைப் பணியில் ஈடுபட்டனர். இதில் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த பகுதிகளில் சோதனை செய்த போது 3 செல்போன்கள் சிக்கின.
அதேபோல இன்று காலை மீண்டும் சிறைச்சாலையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4 செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக சோதனையில் மொத்தம் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பட்டன் வகை செல்போன்கள் ஆகும்.
இந்த செல்போன்கள் அனைத்தும் தண்டனைக் கைதிகளின் பிளாக்கில் உள்ள, கைதிகள் அடைக்கப்படாத அறையின் கழிவறையில் இருந்து எடுக்கப்பட்டதாக சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.
கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.