

ஜெ. ஞானசேகர்
திருச்சி
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 போட்டித் தேர்வுக்கான தேர்வு மையங்கள் வெகு தொலைவில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் அதிருப்தியுடன் தெரிவித்தனர்.
2,144 பணியிடங்களை நிரப்புவதற்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், இணைய வாயிலாக விண்ணப்பதாரர்கள் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான அறிவுரைகள் என்ற பகுதியில், தேர்வெழுத 3 விருப்பமான மையங்களைத் தேர்வர்கள் தேர்வு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இணையத்தில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து பார்த்தபோது, வெகு தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக திண்டுக்கல் லைச் சேர்ந்த சசிக்குமார் கூறியபோது, ‘‘விருப்பத் தேர்வு மையமாக திண்டுக்கல், மதுரை, திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை நான் தேர்வு செய்திருந்தேன். ஆனால், எனக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், நான் தேர்வுக்கு முந்தைய நாள் இரவே அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் செலவாகும். இதேபோல தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த என் நண்பர்கள் சிலருக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் கூறியபோது, “விருப்பத் தேர்வு மையமாக புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்களைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், எனக்கு கரூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, புதுக்கோட்டையைச் சேர்ந்த சிலருக்கு கோவை மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. வறிய நிலையில் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு வெகு தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது’’ என்றார்.
தேர்வு மையங்கள் மாற்றம்
இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா, சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘முதலில் விண்ணப் பித்தவர்களுக்கு முன்னு ரிமை என்ற அடிப்படையில் தேர்வர் களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. எனவே, கடைசியாக விண்ணப்பித்த சிலருக்கு தேர்வு மையங்கள் வேறு மாவட்டங்களில் ஒதுக்கப் பட்டுள்ளன. அவர்களில்கூட கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நியாயமான காரணம் கூறியவர்களுக்கு அவர்கள் கேட்கும் தேர்வு மையங்களை மாற்றிக் கொடுத்துள்ளோம். அடுத்தாண்டு முதல் தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இதுபோன்ற சிக்கல்கள் எழாமல் பார்த்துக் கொள்ளப்படும்’’ என்றார்.