Published : 26 Sep 2019 10:13 AM
Last Updated : 26 Sep 2019 10:13 AM

இந்தியாவில் முதன்முறையாக புதுமையான மால்!- வாடகை, பணியாளர்கள் கவலை இல்லை

அப்போதெல்லாம் அண்ணாச்சி மளிகைக் கடைதான் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். நுகர்வுக் கலாச்சாரம் அதிகரிக்க அதிகரிக்க சூப்பர் மார்க்கெட்டுகள் உருவாகின. இதன் அடுத்த கட்டம் பிரம்மாண்டமான மால்கள். பெரு நகரங்களில் மட்டுமல்லாமல், நடுத்தர நகரங்களில்கூட இப்போதெல்லாம் மால்கள் வந்துவிட்டன. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் அமைந்திருக்கும் மால்கள் நிச்சயம் பார்வையாளர்களை வியப்புக்குள்ளாக்குகின்றன.

அதேசமயம், எல்லோரும் மால்களில் பொருட்களை வாங்க முடிகிறதா? ஏராளமான மக்கள் மால்களில் குவிந்தாலும், பொருட்களை மிகக் குறைந்த அளவிலான மக்களே வாங்குகின்றனர்.

பெரும்பாலானோர் பொழுதைப் போக்குவதற்காகத்தான் மால்களுக்குச் செல்கின்றனர். ஏன் மால்களில் பொருட்கள் விற்பனையாவதில்லை? இதற்கு முதல் மற்றும் முக்கியக் காரணம் விலைதான். வெளியில் கடைகளில் விற்கும் விலையைக் காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. சில விதிவிலக்குகள் வேண்டுமானால் இருக்கலாம். பெரும்பாலான மால்களில் குவியும் மக்களில், சொற்ப எண்ணிக்கையிலானவர்கள்தான் பொருட்களை வாங்குகின்றனர். மற்றவர்கள் எல்லாம் ‘விண்டோ ஷாப்பிங்தான்’!

ஏன் மால்களில் மட்டும் விலை அதிகம். இதற்கான பதில் மிகவும் எளிதானது. வெளியில் இருக்கும் கடைகளைக் காட்டிலும் மால்களில் நடத்தப்படும் கடைகளுக்கு வாடகை அதிகம். அதுமட்டுமல்ல, பணியாளர் சம்பளம், மார்க்கெட்டிங், பராமரிப்பு என எல்லாவற்றுக்குமான செலவும் அதிகம்தான். இதை சமாளிக்க, பொருட்களின் விலையை உயர்த்துவதை தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

சில மால்களில் நடத்தப்படும் கடையின் வாடகையைக் கேட்டால் மயக்கம்தான் வரும். மால்களில் பொருட்களை வாங்குவது என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனிதானா? இந்தக் கேள்விக்குத்தான் விடை அளிக்கும் வகையில், வாடகை, பணியாளர்கள் சம்பளம், மார்க்கெட்டிங் என பல பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும், இந்தியாவிலேயே முதன்முறையாக புதுமையானதாகவும் கோவையில் ஒரு மால் செயல்படத் தொடங்கியது.அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன், பயனாளர்களுக்கும், வாடகைதாரருக்கும் வசதியாகவும், நிம்மதியாக தொழிலை நடத்தும் வகையிலும் இந்த மால் உருவாகியுள்ளது. இங்கு கடை நடத்துவோர், மாதந்தோறும் நிலையான வாடகை செலுத்தத் தேவையில்லை. பணியாளர்கள் கவலையும் கிடையாது. சந்தைப்படுத்தலுக்கும் அதிக செலவு செய்யத் தேவையில்லை. ஒவ்வொரு கடையின் வருவாய் பங்களிப்பைக் கொண்டு, வாடகை, ஆட்களுக்கான செலவு மற்றும் மார்க்கெட்டிங் செலவு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

கோவை சாய்பாபா காலனியில் ராஜா அண்ணாமலை சாலையில்தான் இந்த மால் தொடங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் தரைத் தளத்தில் 5,800 சதுரடியில் இது அமைந்துள்ளது.

இது குறித்து ஏஎஸ்கே இன்ஃப்ரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கீர்த்தி, செயல் இயக்குநர் தர் ஆகியோரிடம் பேசினோம். “பொதுவாக சில்லறை வணிகர்களுக்கு மூன்று பிரச்சினைகள்தான் பிரதானமாக இருக்கும். இதில் முதல் பிரச்சினை கடை வாடகை. குறிப்பாக, மால்களில் கடை நடத்த அதிக வாடகை கொடுக்க வேண்டும். அடுத்து, ஆட்களுக்கான சம்பளம், மார்க்கெட்டில் செலவு. நாங்கள் ஆரம்பத்தில் சில நிறுவனங்களில் பணியாற்றியபோது, இந்த பிரச்சினைகளை எதிர்கொண்டோம். பின்னர், தனியாகத் தொழில் தொடங்கியபோது, இவற்றுக்குத் தீர்வுகாண முடிவு செய்தோம். ஏற்கெனவே, கோவை வடவள்ளி, சாய்பாபா காலனி, லாலிரோடு பகுதிகளில், 2 ஆயிரம் சதுர அடிக்கும் குறைவாக கடைகளில் இந்த முயற்சியை செயல்படுத்தினோம். அங்கு கடை வைத்துக் கொள்பவர்களுக்கு நிலையான வாடகை கிடையாது. விற்பனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கொடுத்தால் போதும். இதில் கிடைத்த வெற்றி, ஒரு மாலை உருவாக்கும் தன்னம்பிக்கையைக் கொடுத்தது.

புதிதாக தொழில்முனையும் இளைஞர்களுக்கும், வாடகைப் பிரச்சினையால் தவிப்போருக்கும் உதவும் வகையில் இந்த மாலை உருவாக்கினோம். இங்கு தற்போது ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளிகள், அலங்கார நகைகள், உதிரி பொருட்கள், விளை
யாட்டுகள் மற்றும் பல்வேறு உணவு வகைகள், 100 சதவீதம் சைவ உணவகம் போன்றவை இடம்பெற்றுள்ளன. பணத்துக்கும், பொருளுக்கும் மதிப்பளிப்பதுடன், தரமான உணவுக்கும் பொறுப்பேற்று செயல்படுத்துகிறது எங்கள் குழு.

வாடகைப் பிரச்சினைக்கு அடுத்து, ஊழியர்கள் சம்பளம், சரியான ஊழியர்கள் கிடைப்பது போன்றவற்றை தொழில்முனைவோர் எதிர்கொள்ள நேரிடுகிறது. இந்த மாலில் அனைவருக்கும் பொதுவாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான சம்பளம் பகிர்ந்து கொள்ளப்படும். அதேபோல, மார்க்கெட்டிங் செலவுகளையும், கடை நடத்துவோர் பகிர்ந்து கொள்ளலாம்.இங்கு விலையை சம்பந்தப்பட்ட கடைக்காரர் நிர்ணயித்தாலும், பில் போடும் பணியை சென்ட்ரலைஸ்டு செய்துள்ளோம். எனவே, ஒவ்வொரு கடைக்காரரின் வருவாய் என்ன என்பது தெரிந்துவிடும்.

இந்த மூன்று முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதால், பொருட்களின் விலையை அதிகம் உயர்த்தும் தேவையிருக்காது. இதனால், சரியான விலையில் நுகர்வோருக்கு பொருட்கள் கிடைக்கும்.

இந்த மால் தற்போது வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளதால், அடுத்து கோவைபுதூர், மேட்டுப்பாளையம் சாலை, சரவணம்பட்டியில், 6,000 சதுர அடியிலிருந்து 40,000 சதுர அடி வரையிலான மால்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதேபோல, கொச்சியில் அக்டோபர் மாதமும், தொடர்ந்து பெங்களூரு, சென்னையிலும் இந்த மால்களைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.திறமையான இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கவும், புதிய ‘ஸ்டார்ட்அப்’களை தொடங்கவும் சிறந்த தளத்தை உருவாக்கித்தர வேண்டுமென்பதே எங்களது நோக்கம்” என்றனர்.

மதுரையைச் சேர்ந்த அருண்லால் கூறும்போது, “1901-ல் எஸ்ஆர்பி சில்க்ஸ் என்ற நிறுவனத்தை சென்னையில் எங்கள் முன்னோர் தொடங்கினர். 1945-ல் மதுரையில் கிளையைத் திறந்தோம். தற்போது முதல்முறையாக கோவையில் கால் பதித்துள்ளோம். வணிகர்களின் முக்கிய 3 பிரச்சினைகளுக்கு இங்கு தீர்வுகிடைத்துள்ளது. இதனால் சாதாரண விலையில் ஜவுளிகளை விற்க முடிகிறது. எனவே, இந்த புதுமையான முயற்சி நிச்சயம் வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x