

காதலித்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் வங்கிக் கிளை மேலாளரிடம் மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
பெங்களூருவை சேர்ந்தவர் பிரியங்கா (26). எம்பிஏ, பிஎட் பட்டதாரி. உலக கைப்பந்து போட்டிகளில் பங்கேற் கும் வீராங்கனை. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த சுண்டக்கோட்டையை சேர்ந்தவர் எம்.நவீன் ராஜா ஜேக்கப் (28). இவரும் கைப்பந்து வீரர். சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு வங்கிக் கிளையில் மேலாளராக பணியாற்றுகிறார். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தன்னை ஜேக்கப் திருமணம் செய்யா மல் ஏமாற்றிவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரியங்கா கடந்த 29-ம் தேதி புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
நானும், ஜேக்கப்பும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித் தோம். திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் - மனைவி யாக வாழ்ந்தோம். கோடம்பாக்கத்தில் அவர் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில், கோவை போலீஸ் அதிகாரியின் மகளுக்கும், ஜேக்கப்புக்கும் வரும் 13-ம் தேதி உப்பிலிபாளையத்தில் திருமணம் நடக்க இருப்பதாக கேள்விப்பட்டேன். இதுபற்றி ஜேக்கப்பிடம் கேட்டதற்கு, ‘‘எனக்கு பணமும் அந்தஸ்தும்தான் முக்கியம். உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது’’ என்று கூறிவிட்டார்.
ஆரம்பத்தில் ஜேக்கப்பின் காதலை நான் ஏற்க வில்லை. ‘நீ இல்லை என்றால் செத்துவிடுவேன்’ என்று அவர் கூறியதால்தான் ஏற்றுக்கொண்டேன். இப்போது என்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். அவர் களது திருமணத்தின்போது நான் எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்று ஜேக்கப்பும் உறவினர்களும் என்னை மிரட்டி வருகின்றனர். இதனால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் உள்ளது. ஜேக்கப்பை விட்டுக்கொடுக் கவோ, அவரை பிரிந்து வாழவோ என்னால் முடியவில்லை.
திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி நம்பிக்கை மோசடி செய்து என்னை ஏமாற்றிய ஜேக்கப் மற்றும் என்னை மிரட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 13-ம் தேதி நடக்கவுள்ள திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு புகாரில் பிரியங்கா கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து மாம்பலம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீஸார் நேற்று ஜேக்கப்பை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கலா கூறியபோது, ‘‘பிரியங்காவின் புகார் அடிப்படையில் ஜேக்கப்பை அழைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படவில்லை. புகாரில் கூறப்பட்டதற்கும், ஜேக்கப் சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது விசாரணையில் தெரிகிறது. அவர்கள் இருவரையும் ஒன்றாக வைத்து சனிக்கிழமை (இன்று) விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.