இந்திய தயாரிப்பு ‘வராஹா’ ரோந்து கப்பல் அர்ப்பணிப்பு; எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் முப்படைகள்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

இந்திய தயாரிப்பு ‘வராஹா’ ரோந்து கப்பல் அர்ப்பணிப்பு; எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் முப்படைகள்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
Updated on
2 min read

சென்னை, 

இந்திய தயாரிப்பான ‘வராஹா’ ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

‘வராஹா’ என்ற அதிநவீன ரோந்துக் கப்பலை கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, ரோந்துக் கப்பலை கடலோரக் காவல்படையிடம் ஒப் படைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னை அருகே காட்டுப் பள்ளியில் அமைந்துள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ‘வராஹா’ ரோந்துக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலோரக் காவல் படையின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்தக் கப்பல் மங்களூர் துறை முகத்தில் இருந்து கன்னியாகுமரி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும். கடல்வழி தீவிரவாதம், கடத்தல், சட்டத்தை அமல்படுத்தும்போது ஏற்படும் சிரமங்கள், கடல் மாசுபடுதல் போன்றவற்றால் ஏற் படும் சவால்களை எதிர்கொள்ள இந்திய கடலோரக் காவல்படை யின் பலத்தை அதிகரிக்க வேண் டியுள்ளது. இக்கப்பலில் அதி விரைவுப் படகுகள், மருத்துவ வசதி, நவீன கண்காணிப்பு முறைகள் உள்ளன. இதன்மூலம் கடலில் தத்தளிப்பவர்களை எளி தாகக் கண்டறியவும், மீட்கவும் முடியும்.

கடலோர பாதுகாப்பில் இந்திய கடலோரக் காவல்படையுடன் மற்ற பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன. மீனவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக சமூக தொடர்புத் திட்டம் செயல்படுத்தப் படுவது பாராட்டத்தக்கது. தேசியப் பாதுகாப்பு என்ற பொது நோக்கத் துக்காக இந்திய கடலோரக் காவல் படையுடன் மற்ற பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து முனைப் புடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்குத் தேவையான பயிற்சி, திறன் மேம்பாடு, ஒருங் கிணைந்த செயல்பாடு ஆகிய வற்றுக்காக 7 கடல்சார் நாடு களுடன் இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய கடலோரக் காவல்படையின் அளப்பரிய பணி மிகவும் பாராட்டுக்குரியது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

கடலோரக் காவல்படை இயக்குநர் ஜெனரல் கே.நடராஜன் பேசும்போது, “கடலோரக் காவல் படைக்கு 7 அதிநவீன ரோந்துக் கப்பல்களை தயாரித்துக் கொடுக்க எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இதில் 4-வது கப்பல் ‘வராஹா’. 98 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பலின் மொத்த எடை 2,100 டன். 2 இன்ஜின்களால் இயக்கப்படும் இக்கப்பல் மணிக்கு 26 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும். இதன் ஆயுட்காலம் 5 ஆயிரம் நாட்டிக்கல் மைல்கள் ஆகும். இக்கப்பலில் 14 அதிகாரிகளும், 89 சிப்பந்திகளும் இருப்பார்கள். மேலும், 2 ஹெலிகாப்டர்கள், 4 அதிவிரைவு படகுகள் உள்ளன.

இந்திய கடலோரக் காவல் படையில் தற்போது 142 கப்பல் கள் மற்றும் படகுகளும், 62 போர் விமானங்களும் உள்ளன. மேலும் 50 கப்பல்கள் மற்றும் படகுகளும், 16 போர் விமானங் களும் கடலோரக் காவல் படை யில் சேர்க்கப்படவுள்ளன. உலகில் உள்ள நாடுகளின் கடற்படை களுடன் ஒப்பிடுகையில் இந்திய கடலோரக் காவல்படை பெரிய தாகும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘வராஹா’ கப்பல் கேப்டன் துஷ்யந்த் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.

இவ்விழாவின் முடிவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ‘‘ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுவ தாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பஞ்சாப் முதல்வர் அண்மையில் தகவல் தெரிவித்தது பற்றியும், பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் மீண்டும் தீவிர வாத முகாம்கள் அமைக்கப் பட்டிருப்பது’’ குறித்தும் செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு “எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன" என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in