

சென்னை
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறவி குறைபாட்டால், வயிற்றில் இருந்த குடல்கள் நெஞ்சு பகுதிக்கு சென்று உயிருக்குப் போராடிய 6 பச்சிளம் குழந்தைகளை அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் காப்பாற்றினர்.
தெற்காசியாவில் மிகப்பெரிய குழந்தை கள் மருத்துவமனையாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிறந்து 3, 4, 5 நாட்களே ஆன பிறவி குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த 7 குழந்தைகள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வலது பக்கம் சென்ற இதயம்
பிரசவத்துக்கு முன் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளை டாக்டர்கள் ஆராய்ந்தபோது, குழந்தைகளின் வயிற்றுப் பகுதியையும், நெஞ்சுப் பகுதியையும் இணைக்கும் இடத்தில் தசை சவ்வு பகுதியில் ஓட்டை இருந்துள்ளது. அந்த ஓட்டை வழியாக, வயிற்றுக்குள் இருக்கும் சிறுகுடல்கள் நெஞ்சுப் பகுதிக்குச் சென் றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், நுரையீரல் சுருங்கி, விரியும் தன்மை இல்லாமல் இருந்தது. சிறுகுடல்கள் நெஞ்சுப் பகுதிக்கு சென்றதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இடது பக்கம் இருந்த இதயம் வலது பக்கம் நகர்ந்திருந்தது. நுரையீரல் ரத்தக்குழாயில் அழுத்தம் இருந்ததும், மூச்சுத்திணறல் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, 7 குழந்தைகளும் பச் சிளம் குழந்தைகள் நலத் துறையில் அனு மதிக்கப்பட்டன. துறையின் தலைவர் சி.என். கமலரத்தினம் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளித்தும், மருந்து கள் கொடுத்தும் குழந்தைகளுக்கு ஏற் பட்ட மூச்சுத்திணறல், ரத்த அழுத்தம் மற் றும் உடல் நீலநிறமாக மாறுவதை கட்டுப்படுத்தினர்.
பின்னர், குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டன. குழந்தைகள் அறுவை சிகிச்சைத்துறைத் தலைவர் ஜெ.முத்துக்குமரன் தலைமையில் டாக்டர்கள் ஆர்.செந்தில்நாதன், கற்பகவிநா யகம், விவேக், ஜீவ ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை செய்து நெஞ்சுப் பகுதியில் இருந்த சிறுகுடல்களை பாதுகாப்பாக வயிற்றுப் பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர், தசை சவ்வு பகுதியில் இருந்த ஓட்டையை அடைத்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஒரு குழந்தை மட்டும் உயிரிழந்தது. மற்ற 6 குழந்தைகளும் நலமாக உள்ளன என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
உயிரிழப்பை தடுக்கலாம்
அறுவை சிகிச்சை தொடர்பாக டாக்டர் முத்துக்குமரன் கூறியதாவது:
குழந்தைகள் பல்வேறு பிறவி குறைபாடுகளுடன் பிறக்கின்றன. ஆனால், இந்தப் பிறவி குறைபாடு உயிருக்கு ஆபத்தானது. இதை அப்படியே விட்டால், உயிரிழப்பு நேரிடலாம். அதேநேரத்தில் இந்த குறைபாட்டை கர்ப்பப்பையில் குழந்தை இருக்கும் போதே பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும். குழந்தை பிறந்த பின்னரும் பரிசோதனை செய்து கண்டுபிடிக்கலாம்.
குறைபாட்டை கண்டுபிடித்து ஆரம்பத் திலேயே சிகிச்சை அளித்தால் உயிரிழப்பை தடுக்கலாம். முதல்வரின் விரிவான மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவச மாக செய்யும் இந்த அறுவை சிகிச்சை களை, தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும்.
இவ்வாறு டாக்டர் முத்துக்குமரன் கூறினார்.