

ஆண்டிபட்டி
பொங்கல் பண்டிகைக்காக ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகளை நெய்யும் பணி ஆண்டிபட்டி பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பருக்குள் முடித்துத்தர கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டியில் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் நெசவுத்தொழிலுக்கு பிரசித்தி பெற்ற பகுதியாகும். இங்கு பாரம்பரியமாக 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஆண்டு முழுவதும் கைத்தறி புடவைகள், வேட்டிகள் நெய்யப்பட்டு பிரபல ஜவுளிக் கடைகளுக்கும், கூட்டுறவு சொசைட்டிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 2020 பொங்கல் தினத்திற்கான இலவச வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய தமிழகம் முழுவதும் உள்ள சொசைட்டிகளுக்கு தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.
இதன்படி ராஜபாளையம் - சத்திரப்பட்டி, பள்ளிப்பாளையம், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பல இடங்களிலும் இதற்கான பணி நடைபெற்று வருகிறது.
ஆண்டிபட்டி பகுதியிலும் இப்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3 லட்சம் சேலைகள் இலக்காக வைத்து நூல் உள்ளிட்ட நெசவிற்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. டிசைன் எதுவும் இல்லாமல் இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட வண்ணங்களில் தயாராகும் வகையில் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே இதற்கான பணிகள் துவங்கியுள்ளன. வரும் டிசம்பரில் இப்பணிகளை முடித்துத்தர கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நெசவுப்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து நெசவாளர்கள் கூறுகையில், கைத்தறியில் ஒருநாளைக்கு 3 சேலைகளும், பெடல் தறியில் 5 சேலைகளும் நெய்ய முடியும். பல மாதங்கள் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் பலரும் ஆர்வமாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாரம் ஒருநாள் கூலியும், மூலப்பொருட்களும் தரப்படும். நெய்த சேலைகளையும் அப்போது சொசைட்டியில் ஒப்படைப்போம். அங்கு ஒன்று சேர்க்கப்பட்டு மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்றனர்.