Published : 25 Sep 2019 12:26 PM
Last Updated : 25 Sep 2019 12:26 PM

வெங்காய விலை உயர்வு: செயற்கையான விலையேற்றம் ஏற்படாத வகையில் நடவடிக்கை; அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை

வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை செயற்கையாக உயராத அளவுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டையில் இன்று (செப்.25) செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:

"பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக, வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்கப்படுகின்றது. இந்த விலையைத் தொடர்ந்து கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத் துறையும் உணவுத்துறையும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. பண்ணை பசுமை நுகர்வோர்க் கடைகள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காய்கறிகள் மட்டுமல்லாமல் எந்த அத்தியாவசியப் பொருட்கள் விலையேறினாலும் அதனைக் கட்டுப்படுத்தி, தமிழக அரசு விலை நிலைப்படுத்தல் நிதியின் மூலமாக, அந்தப் பொருட்களை வாங்கி சந்தை விலையில் குறைந்த விலைக்கு விற்று, செயற்கையான விலை ஏற்றம் ஏற்படாத வகையிலும், கள்ளச் சந்தையில் பதுக்காத அளவுக்கும் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது.

மத்தியத் தொகுப்பில் 36,000 மெட்ரிக் டன் வெங்காயம் இருப்பு உள்ளது. இன்னும் வாங்க இருக்கிறோம். ஆந்திராவிலிருந்து வரும் வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்கப்படுகின்றது. அந்த வெங்காயம் மூன்று நாட்களுக்கு மேல் இருக்காது. ஆனால், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வாங்கக்கூடிய வெங்காயம் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை தாங்கக் கூடியது. அதனால், ஆந்திர வெங்காயங்களை மக்கள் விரும்பி வாங்க மாட்டார்கள்.

இருந்தாலும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆந்திர வெங்காயத்தையும் வாங்குவதற்குச் சொல்லியிருக்கிறோம். இதுவரை அந்த வெங்காயங்களை வாங்கியதில்லை. அந்த வெங்காயம் கிலோ ரூ.32 முதல் ரூ.35 வரை விற்கப்படும். கள்ளச் சந்தையில் இந்த வெங்காயங்களைப் பதுக்க முடியாது. ஏனென்றால், இந்த வெங்காயத்தை நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள முடியாது. லாப நோக்கமில்லாமல் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கூட்டுறவுத் துறை எடுத்துள்ளது.

தமிழகத்தில் குளிர்ப்பதன வசதிதான் உள்ளது. வெப்ப நிலையில் தேக்கி வைப்பதற்கான வசதி இல்லை. இந்த வசதி இருந்தால்தான் ஒரு மாதம் வரை வெங்காயங்களை வைத்திருக்க முடியும்.

திமுக, வெங்காய விலையேற்றத்தை விமர்சித்துள்ளது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் 2010-ல் செப்டம்பரில் வெங்காயம் கிலோ ரூ.102-க்கு விற்றது. அக்டோபரில் ரூ.129, நவம்பரில் ரூ.140, டிசம்பரில் ரூ.140-க்கு விற்கப்பட்டது. அப்போது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், வெங்காயம் விலை ரூ.50-60ஐ எட்டும்போதே விலையைக் கட்டுப்படுத்த இப்போது அதிமுக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது''.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x