

சுபஸ்ரீ மரணத்திற்குக் காரணமானவர்களை விட்டுவிட்டு , டிஜிட்டல் பேனர் நிறுவனங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதற்குத் தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
சாலை நடுவில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து லாரி மோதி உயிரிழந்தார். நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணித்து சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. முக்கியக் குற்றவாளியான அதிமுக பிரமுகர் கைது செய்யப்படாத நிலையில் பேனர் தயாரித்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து பேனர் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான எஸ்.பஷீர் அகமது தாக்கல் செய்துள்ள மனுவில்,
“தனிநபர்கள், நிறுவனங்கள் அரசுத் துறைகளுக்கு டிஜிட்டல் பேனர்கள் அடித்துத் தருகிறோம். பிரிண்டிங் தொழிலில் பல லட்சம் முதலீடு செய்துள்ளோம். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தமிழ்நாடு நகராட்சி சட்டத்திருத்தத்தின் கீழ் முறையான உரிமம் பெற்று தொழில் செய்து வருகிறோம். சுபஸ்ரீ மரணத்தைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ள நோட்டீஸில் தங்கள் அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் டிஜிட்டல் பேனர்களைத் தடை செய்யவில்லை. பிரிண்டிங் பிரஸ் மற்றும் டிஜிட்டல் பேனர் நிறுவனங்களுக்கு சீல் வைக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதே நேரம் டிஜிட்டல் பேனர் எங்கு வைக்க வேண்டும் என்று நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. சுபஸ்ரீ மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
யார் விதிகளை மீறி பேனர் வைத்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் கோபத்தைக் காட்டக்கூடாது. எனவே எங்கள் தொழில் பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு, எங்கள் தொழிலில் மாநகராட்சி அதிகாரிகள் தலையிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷ்சாய் முன் நேற்று முறையிட்டனர். மனுவைத் தாக்கல் செய்யுங்கள் நாளை (இன்று செப்.25) விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மனு தாக்கல் செய்யப்பட்டால் இன்று விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.