Published : 25 Sep 2019 11:49 AM
Last Updated : 25 Sep 2019 11:49 AM

இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு கனிமொழி உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: திமுக அறிவிப்பு

சென்னை

இடைத்தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கு கனிமொழி உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திமுக எம்எல்ஏ மறைவால் விக்கிரவாண்டி தொகுதியும் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் எம்.பி. ஆனதால் அவர் ராஜினாமா செய்த நாங்குநேரி தொகுதியும் காலியாக இருக்கிறது. இந்த 2 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் ஆளும் அதிமுக போட்டியிடுகிறது. பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகள் அதிமுகவை ஆதரிக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் விக்கிர வாண்டியில் திமுகவும் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் புகழேந்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிமுகவும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான தேர்தல் பணி பொறுப்பாளர்களை, திமுக நியமித்துள்ளது.

புகழேந்தி போட்டியிடும் விக்கிரவாண்டி தொகுதியில், முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த நிர்வாகியுமான பொன்முடி தலைமையில் தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஜெகத்ரட்சகன், செல்வகணபதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நாங்குநேரி தொகுதிக்கும் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐ.பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், திமுக எம்.பி.கனிமொழி, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x