

சென்னை
ஐசிஜிஎஸ் வராஹா போர்க்கப்பல், இன்று இந்திய கப்பற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை, துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் இந்திய கப்பற்படை டிஜி கிருஷ்ணமூர்த்தி நடராஜன், எல் அண்ட் டி கப்பல் துறை இயக்குநர் ஜே.டி. பாட்டில், கப்பற்படை அதிகாரிகள், ஐசிஜிஎஸ் வராஹா போர்க்கப்பல் பணியாளர்கள் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஐசிஜிஎஸ் வராஹா போர்க்கப்பலை இந்திய கப்பற்படையிடம் ஒப்படைக்கும் விழா நடந்த பிறகு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அவர் கூறும்போது, ''புராணங்களின் அடிப்படையில் 'வராஹா' என்னும் பெயர், தியாகத்தையும் மீட்பையும் குறிக்கிறது. பூமித் தாயைக் காத்து, நல்லிணக்கத்தையும் வலிமையையும் பறைசாற்றுகிறது.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் வராஹா கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. கடலின் தூய்மையை உறுதிப்படுத்த 'சாகர்' திட்டம் (பிராந்தியங்களில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ) பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் கடலின் சுத்தம் உறுதிப்படுத்தப்படும்.
மங்களூரு துறைமுகத்தில் தனது இயக்கத்தைத் தொடங்கும் வராஹா போர்க்கப்பல், மேற்குக் கடற்கரையில் கன்னியாகுமரி வரை செல்லும்'' என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
முன்னதாக நேற்று, இந்தியக் கடலோர காவல்படையில் வீரதீரச் செயல்புரிந்த சிறந்த அதிகாரிகள், வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது, சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது மற்றும் கடலோரக் காவல்படையின் வீரதீரச் செயல் விருது வழங்கும் விழா, சென்னை பரங்கிமலையில் உள்ள கடலோரக் காவல்படையின் விமான தளத்தில் நடந்தது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.