

தஞ்சாவூர்
ஜம்மு- காஷ்மீரில் சிறப்பு பிரிவு நீக்கப்பட்ட பின் அங்குள்ள பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் கிடைத்துள்ளது என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தேச ஒற்றுமை விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஜம்மு- காஷ்மீர் நேற்றும் இன்றும் என்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
ஜம்மு- காஷ்மீரில் 370-வது சிறப்பு பிரிவு நீக்கப்பட்ட பின், அங்கு வன்முறை குறைந்துள்ளது. அங்குள்ள பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் கிடைத்துள்ளது. அங்கு நிலம் வாங்க முடியாது என்ற இரும்புத் திரை அகற்றப்பட்டுள்ளது. இனி எல்லோரும் அங்கு தொழில் தொடங்கலாம், நிலம் வாங்கலாம். இந்தியாவில் உள்ள இதர மாநி லங்களைப் போல இனி ஜம்மு- காஷ்மீரும் வளர்ச்சி அடையும்.
உண்மை நிலை இப்படியிருக்க ஜம்மு- காஷ்மீரில் ஜனநாயகம் பறிக்கப்பட்டுள்ளதாக திமுக தலை வர் ஸ்டாலின் பேசி வருகிறார். அவருடைய கட்சியிலேயே ஜன நாயகம் கிடையாது, குடும்பத்தில் உள்ளவர்களுக்குதான் கட்சிப் பொறுப்புகளை வழங்கி வருகிறார். போராட்டங்களை அறிவிப்பதும், பின்னர் திரும்பப் பெறுவதுமாக ஸ்டாலின் உள்ளார் என்றார்.
கருத்தரங்குக்கு ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் எம்.முரளி தலைமை வகித்தார். பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் பன்னவயல் இளங்கோ, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.