Published : 25 Sep 2019 10:44 AM
Last Updated : 25 Sep 2019 10:44 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றிக்கு களப் பணியாற்றுவோம்; வேல்முருகன்

சென்னை

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்குப் பணியாற்றிடுவோம் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 24-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், திமுக விக்கிரவாண்டி தொகுதியிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக ஒன்றியச் செயலாளராக 3 முறை பதவி வகித்த நா.புகழேந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளான மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (செப்.25) வெளியிட்ட அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியாகவுள்ள நிலையில் வரும் அக்டோபர் 21-ம் தேதியன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தேர்தலில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுகவின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டியிடவுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலைப் போலவே இந்த முறையும் இடைத்தேர்தல்களிலும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி களப்பணியாற்றிடும்," என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x