

செங்கல்பட்டு நகராட்சியில் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் அடிப்படை வசதிகளை மேம் படுத்த முடியாத நிலை உள்ள தாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையை மாற்ற, நகர எல்லை களை விரிவுபடுத்தி நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து கேட்டால், நிதி ஆதாரம் இல்லாமல் தவிப்பதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, நகரப் பகுதியை விரிவுபடுத்தி நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து, பெயர் கூற விரும்பாத நகராட்சி அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாவது: நகரத்தில் உள்ள 100 சதவீத குடியிருப்பு நிலங் களில், 40 சதவீத குடியிருப்புகள் மட்டுமே சட்ட பூர்வமாக உள்ளன. மற்றவை மலை புறம்போக்கு, நீர் நிலை புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ளன. 40 சதவீத நிலங்களின் மூலம் ஆண்டுக்கு ரூ.2.5 கோடி நிதி ஆதாரம் கிடைக்கிறது. மலை புறம்போக்கு நிலத்தில் உள்ள குடியிருப்புகளை அங்கீகரிக்காமல், வரி வசூலிக்க முடியாது.
அதனால், நகராட்சிக்கு கிடைக் கும் வரி பணத்தை, நகரப்பகுதி முழுவதும் குடியிருக்கும் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக செலவிடும் நிலை உள்ளது. நிதி ஆதாரம் இல்லாத நிலையிலும், விதிகளுக்கு மாறாக உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். அதனால், புதிய திட்டங்களை செயல்படுத்த முடியாத அளவுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சட்ட விரோத குடியிருப்புகளை அகற்ற அரசியல்வாதிகள் முட்டுக்கட்டையாக உள்ளனர்.
இதனால், செங்கல்பட்டில் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளிடையே சுமுக உறவு இல்லை. இதற்கு சான்றாக, கடந்த 5 ஆண்டுகளாக செங்கல்பட்டு நகராட்சியில் ஆணையர் நியமிக் கப்படுவதும், பின்னர் மாற்றப்படு வதையும் கூறலாம். இதனாலேயே, செங்கல்பட்டு நகராட்சியில் முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன.
நகராட்சியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டு மானால், நகரத்தை விரிவுபடுத்த வேண்டும். வல்லம், ஆலப்பாக்கம், வெண்பாக்கம், திம்மாவரம், வீரா புரம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் மகேந்திரா சிட்டியின் ஒரு பகுதி ஆகியவற்றை செங்கல்பட்டு நகராட்சியுடன் இணைக்க வேண்டும். இதனால், நகராட்சிக்கு நிதி ஆதாரம் அதிகரிக்கும்.
கூடவே அரசு ஒதுக்கும் நிதியும் அதிகரித்தால் அடிப்படை வசதிகளை மேம்படுத்தலாம். வல்லம், ஆலப்பாக்கம் பகுதியை இணைப்பதன் மூலம் பாதாள சாக்கடை பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். நிதி ஆதாரத்தை அதிகரிக்காமல், அதிகாரிகளை மட்டும் குறைவதால் பயனில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசன் கூறியதாவது: அடிப் படை வசதிகளை மேம்படுத்தும் பணியை நகராட்சி தொடர்ந்து மேற்கொண்டுதான் வருகிறது. நிதி ஆதாரம் தரக்கூடிய தொழிற் சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் நகரப் பகுதியில் இல்லாததால் நிதி ஆதாரம் கிடைப்பதில்லை என கூறலாம்.
நகராட்சியை விரிவுபடுத்தி னால், இணைக்கப்படும் பகுதி களும் மேம்படும், நகரப் பகுதி யிலும் கூடுதல் அடிப்படை வசதி களை ஏற்படுத்த முடியும். விரிவு படுத்துவதற்கான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.