

திருநெல்வேலி
37 ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்ட நடராஜர் சிலை இன்று (செவ்வாய்க்கிழமை) பக்தர்களின் மேளதாள உற்சாக வரவேற்புக்கு இடையே கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் உடனுறை அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் உடனுறை அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி இரவு கதவுகள் உடைக்கப்பட்டு, மூலஸ்தானத்தில் இருந்த பஞ்சலோகத்தால் ஆன நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், திருவில்லி விநாயகர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் குற்றவாளிகளை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை கையில் எடுத்தது. இந்த குழுவின் விசாரணையில், கல்லிடைக்குறிச்சி கோயிலில் திருட்டு போன நடராஜர் சிலை ஆஸ்திரேலிய நாட்டில் அடிலைடில் உள்ள ‘ஆர்ட் கேலரி ஆப் சவுத் ஆஸ்திரேலியாவில்’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சிலை திருடு போவதற்கு முன் 1958-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை சேகரித்த விசாரணைக் குழு, அதனையும், ஆஸ்திரேலிய கேலரியில் இருந்த நடராஜர் சிலை புகைப்படத்தையும் தொல்லியல் துறை நிபுணர் நாகசாமியிடம் வழங்கி, அவரது கருத்தை கேட்டது. அவர் ஆய்வு செய்து, இரண்டு புகைப்படங்களும் ஒரே சிலையினுடையதுதான் என்று அறிக்கை அளித்தார்.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்த சிலையை இந்தியாவுக்கு கொண்டுவர விமான பயணச் செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வலியுறுத்திய நிலையில், அதனை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கேலரியின் பதிவாளர் ஜேன் ராபின்சன் விமானச் செலவை ஏற்றுக்கொண்டு, புதுடெல்லிக்கு சிலையைக் கொண்டுவந்து ஒப்படைத்தார். அவரிடம் இருந்து சிலையை சிறப்பு புலனாய்வுக்குழு பெற்றுக்கொண்டது.
சுமர் 600 முதல் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சிலையில் தற்போதைய வெளிநாட்டு மதிப்பு ரூ.30 கோடி ஆகும்.
மீட்கப்பட்ட இந்த சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது. இதையடுத்து, இன்று காலையில், பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கல்லிடைக்குறிச்சிக்கு சிலையை கொண்டுவந்து, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ஊர் எல்லையில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோயிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களும், பொதுமக்களும் பொன் மாணிக்கவேலுவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
விசாரணைக்கு இடையூறாக இருப்பவர்கள் சிறைக்குச் செல்வார்கள்...
பின்னர், செய்தியாளர்களிடம் பொன் மாணிக்கவேல் கூறும்போது, “நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ள கோயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பை பலத்தடுத்துமாறு கூறியுள்ளோம். அனைத்து கோயில்களிலும் சிலை பாதுகாப்பு அறை கட்ட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டு 24 மாதம் முடிந்தும் எந்த கோயிலிலும் சிலை பாதுகாப்பு அறை கட்டவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளோம்.
இந்த கோயிலில் சிலை பாதுகாப்பு அறை அமைக்கவும் கூறியுள்ளோம். 37 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சிலையைக் கண்டுபிடித்து, ஒப்படைத்துள்ளோம். சிலையைக் கண்டுபிடித்ததில் எங்கள் எல்லோருக்கும் பெருமையாக உள்ளது.
சிலையை கொண்டுவர ஆஸ்திரேலிய டெபுடி கமிஷனர் கார்த்திகேயன் பேருதவி செய்தார். இந்த ஊரில் உள்ள அனைத்து ஆன்மிகவாதிகள் வேண்டிக்கொண்டதால் நடராஜர் திரும்பி வந்துவிட்டார்.
இந்த கோயிலில் திருடு போன மற்ற சிலைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு நாட்டில் உள்ளன. அவற்றை கண்டுபிடித்த தர வேண்டியது எங்கள் பொறுப்பு. எங்கள் விசாரணைக்கு இடையூறாக இருப்பவர்கள் சிறைக்குச் செல்வார்கள். மீட்கப்பட்ட நடராஜர் சிலையை பாதுகாப்பதில் குறைபாடு இருந்தால் சும்மா விடமாட்டோம்.
அறநிலையத் துறையில் உள்ள எல்லோரையும் குறை கூற முடியாது. 95 சதவீதம் பேர் நல்லவர்கள் உள்ளனர். கடமை தவறியவர்களைத் தான் கைது செய்துள்ளோம்” என்றார்.
-த.அசோக்குமார்