

சென்னை
அனைத்து கிராம மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் அதிவேக இணையம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின் ஆளுமைக் கூட்டம், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் ஆளுமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதில் வருவாய்த்துறை மற்றும் தொழில்தொடர்புத் துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''இந்தியாவில் தமிழகம் மட்டுமே மின் ஆளுமை மிக்க மாநிலமாகத் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்றபோது, ஐடி துறைகளில் தமிழர்களே அதிகம் கோலோச்சுவதைக் கண்டோம். அது பெருமைமிக்க தருணமாக இருந்தது. சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லந்தோறும் இணையம் என்ற திட்டத்தை அறிவித்தார், இத்திட்டம் 1,815 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்.
இதன்மூலம் அனைத்து கிராம மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் அதிவேக இணையம் வழங்கப்படும்'' என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதேபோல மழைக்காலத்துக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.