கோயம்பேட்டில் 2 அடுக்கு பார்க்கிங், தானிய அங்காடி: தமிழகம் முழுவதும் 1,900 புதிய குடியிருப்புகள் - முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

கோயம்பேட்டில் 2 அடுக்கு பார்க்கிங், தானிய அங்காடி: தமிழகம் முழுவதும் 1,900 புதிய குடியிருப்புகள் - முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்
Updated on
1 min read

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், வீட்டுவசதி வாரியம் சார்பில் தமிழகத்தின் பல இடங்களில் கட்டப்பட்டுள்ள 1,900 புதிய குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். கோயம்பேட்டில் தானிய அங்காடி மற்றும் 2 அடுக்கு பார்க்கிங்கையும் முதல்வர் திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் திருச்சி ஜெயில்பேட்டையில் ரூ.15.89 கோடியில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்பை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

திருவண்ணாமலை, ராமநாத புரம், புதுக்கோட்டை, தஞ்சை, விருதுநகர், திருப்பூர் மாவட்டங் களில் ரூ.82.78 கோடியில் கட்டப் பட்டுள்ள 1,424 அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் திறந்துவைத்தார்.

வீட்டு வசதி வாரியம் சார்பில் தஞ்சை, சென்னை மகாகவி பாரதி நகர், வேலூர் மாவட்டம் காட்பாடி ஆகிய இடங்களில் ரூ.38 கோடியே 81 லட்சத்து 55 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 190 குடியிருப்பு மற்றும் தனி வீடுகளையும் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

மேலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் கோயம் பேட்டில் ரூ.69 கோடியில் 492 கடைகளுடன் உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி கட்டப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளுடன் 2,67,127 சதுரடியில் கட்டப்பட்டுள்ள இந்த விற்பனை அங்காடி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் இரண்டடுக்கு தாழ்தள பார்க்கிங் ஆகியவற்றையும் முதல்வர் திறந்துவைத்தார்.

முதல்வரால் திறந்து வைக்கப் பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.210 கோடியே 59 லட்சத்து 55 ஆயிரம் ஆகும்.

வீடு ஒதுக்கீட்டு ஆணை

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட செரியன் நகர் பகுதியில், எண்ணூர் - மணலி துறைமுக சாலை விரிவாக்கம் காரணமாக 94 குடும்பங்கள் இடம் பெயர்கின்றன.

இவர்களுக்கு தண்டையார் பேட்டை அரங்கநாதபுரம் திட்டத் தின் கீழ் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக் கப்பட்டுள்ளன. இதற்கான ஒதுக் கீட்டு ஆணை மற்றும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.20 ஆயிரம் வீதம், ரூ.18.80 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், அரசு கொறடா மனோகரன், தலைமைச் செயலா ளர் கு.ஞானதேசிகன், வீட்டு வசதி வாரிய தலைவர் ஆர்.முருகையா பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in