Published : 24 Sep 2019 02:29 PM
Last Updated : 24 Sep 2019 02:29 PM

புதுச்சேரி இடைத்தேர்தல்: விருப்ப மனு தாக்கல் செய்தோரிடம் காங்கிரஸ் நேர்காணல்; எதிர்க்கட்சிகளில் நீடிக்கும் குழப்பம்

புதுச்சேரி

புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நாளை முதல்வர் நாராயணசாமியுடன் டெல்லி சென்று ஆலோசனை நடத்த உள்ளதாக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் தெரிவித்தார். அதே நேரத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் இத்தேர்தலில் போட்டியிடுவது பாஜகவா, அதிமுகவா, என்.ஆர்.காங்கிரஸா என்பதில் குழப்பமே நிலவுகிறது.

புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் விருப்ப மனுக்கள் கட்சி அலுவலகத்தில் பெறப்பட்டன. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட முதல்வர் நாராயணசாமிக்கு நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்த புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட 11 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

விருப்ப மனுவைப் பெற்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று (செப்.24)நேர்காணல் தொடங்கியது. விருப்ப மனு தந்தோரிடம் நேர்காணலை நடத்தினர்.

மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, "காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட 11 பேர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில் அவர்களிடம் நேர்காணல் நடத்தினோம். வேட்பாளரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்த முதல்வர் நாராயணசாமியுடன் நாளை (செப்.25) டெல்லி சென்று முடிவெடுப்போம். இடைத்தேர்தலில் பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய காட்சிகளில் எந்தக் கட்சி போட்டியிட்டாலும் சந்திக்கத் தயாராக காங்கிரஸ் உள்ளது" என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிட தொழிலதிபர் நாகராஜன், மருத்துவர் ரங்கராஜன் உள்ளிட்ட 6 பேர் விருப்ப மனுவை புதுச்சேரி கட்சித் தலைமையிடம் அளித்துள்ளனர். அதிமுகவில் 7 பேர் சென்னையில் விருப்ப மனு செய்துள்ளனர்.

காங்கிரஸ், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதால் வேட்பாளர் தேர்வு செய்வதில் கட்சித் தலைமை தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணியில் எந்தக் கட்சி போட்டியிடுவது என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஏனெனில் பாஜக மற்றும் அதிமுக சார்பில் விருப்ப மனு தனித்தனியே அக்கட்சிகள் சார்பில் பெறப்பட்டுள்ளன.

கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனுவைப் பெறாமலும், தனது கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்காமலும் உள்ளது. இதனால் கூட்டணியில் எந்தக் கட்சி போட்டியிடப் போகிறது என்ற குழப்பமும் நிலவி வருகிறது.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x