Published : 24 Sep 2019 11:59 AM
Last Updated : 24 Sep 2019 11:59 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திமுக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் திமுக ஒன்றியச் செயலாளராக 3 முறை பதவி வகித்த நா.புகழேந்தி போட்டியிடுவார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

திமுக எம்எல்ஏ மறைவால் விக்கிரவாண்டி தொகுதியும் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த வசந்த குமார் எம்.பி. ஆனதால் அவர் ராஜினாமா செய்த நாங்குநேரி தொகுதியும் காலியாக இருக்கிறது. இந்த 2 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேட்புமனுத் தாக்கல் நேற்றே தொடங்கிய நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டின. விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் ஆளும் அதிமுக போட்டியிடுகிறது. பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகள் அதிமுகவை ஆதரிக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் விக்கிர வாண்டியில் திமுகவும் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களிடம் இன்று (செப். 24) காலை 10 மணிக்கு நேர்காணல் தொடங்கியது, இந்த நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் 66 வயதான புகழேந்திக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை திமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

யார் இந்த புகழேந்தி?

விவசாயத்தில் ஈடுபாடு கொண்ட புகழேந்தி, திமுகவில் மாவட்ட விவசாய அணிச் செயலாளராகப் பதவி வகித்துள்ளார்.

தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளராக உள்ள புகழேந்தி, விக்கிரவாண்டி திமுக ஒன்றியச் செயலாளராக 3 முறை பதவி வகித்துள்ளார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலிலேயே விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட புகழேந்தி வாய்ப்பு கேட்டிருந்தார். அப்போது வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அதே தொகுதியில் போட்டியிடுகிறார் புகழேந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x