Published : 24 Sep 2019 11:31 AM
Last Updated : 24 Sep 2019 11:31 AM

விசாரணைக்கு இடையூறாக இருந்தால் சிறை: பொன் மாணிக்கவேல் எச்சரிக்கை

கல்லிடைக்குறிச்சி

சிலை மீட்பு தொடர்பான விசாரணைக்கு யாராவது இடையூறாக இருந்தால் அவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளுவேன் என்று பொன்.மாணிக்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட சுமார் 700 ஆண்டுகள் பழமையான குலசேகரமுடையான் சமேத அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகர், விநாயகர் உள்ளிட்ட 5 சிலைகள் கடந்த 1982-ம் ஆண்டு காணாமல் போயின. இக்கோயிலின் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவிடம் கடந்த செப்.11-ம் தேதி டெல்லியில் நடராஜர் சிலை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் கொண்டு வரப்பட்ட, ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை கல்லிடைக்குறிச்சி கோயிலில் வைத்து 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்குமாறு கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல், ''சிலையை மீட்பதில் போலீஸ் அதிகாரிகள் குழுவினர், நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இந்தக் கோயிலில் நடராஜர் சிலைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற சிலைகளுக்கும் விரைவில் பாதுகாப்பு வழங்கப்படும்.

சிலைகள் திருட்டுப் போவதைத் தடுக்க, தரமான கம்பிகள் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும். அவற்றை சாதாரணமாக அறுக்க முடியும். சுமார் 6 முதல் 7 மணி நேரம் ஆகும். இதனால் திருட்டுகள் தடுக்கப்படும்.

அதுவரை சுழற்சி முறையில் 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். ஆன்மிகவாதிகளும் பாதுகாப்புப் பணியில் உதவலாம். மீட்கப்பட்ட நடராஜர் சிலை சுமார் ரூ.28 கோடி முதல் ரூ.30 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட, மீதமுள்ள 3 சிலைகளையும் விரைவில் கண்டுபிடிப்பேன். குற்றவாளிகளைக் கைது செய்வது குறித்த விவரங்கள் சீக்கிரத்தில் வெளியாகும். என்னுடைய விசாரணைக்கு யாராவது இடையூறாக இருந்தால், அவர்களைக் கைது செய்து, சிறையில் தள்ளுவேன்'' என்றார் பொன் மாணிக்கவேல்.

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஏற்கெனவே குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன், பட்டத்தரசி உலகமாதேவி சிலைகளை மீட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x