Published : 24 Sep 2019 10:11 AM
Last Updated : 24 Sep 2019 10:11 AM

ஜவுளித்துறைக்கு கை கொடுங்கள்!- மத்திய அமைச்சர்களிடம் முறையீடு

இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக, மிகப் பெரிய தொழிலாகத் திகழ்கிறது ஜவுளித்தொழில். அதேபோல, ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும் வழங்குகிறது. இந்த நிலையில், பல்வேறு நெருக்கடிகளால் ஜவுளித் துறை வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு ஜவுளித் துறையினர் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு (இஐடிஐ) தலைவர் த.ராஜ்குமார், பருத்தி ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்திக் கழகத் (டெக்ஸ்புரோசில்) தலைவர் டாக்டர் கே.வி.ஸ்ரீனிவாசன், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் (சைமா) தலைவர் அஷ்வின் சந்திரன் ஆகியோர் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய ஜவுளித் துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை டெல்லியில் சந்தித்து விளக்கினோம்.
ஜவுளித் தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களை மறு ஆய்வு செய்வது தொடர்பான சீர்திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தினோம். ஜவுளி அமைச்சகத்தின் ஒப்புதலால் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் பின்னலாடை இறக்குமதியாவதால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், இந்திய நூலை வங்கதேசம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினோம். அதேபோல, சந்தையில் விலை என்னவாக இருந்தாலும், ஆலைகளுக்குத் தடையில்லாமல் இந்திய பருத்திக் கழகம் தேவையான பருத்தியை விநியோகம் செய்ய வேண்டும். இதில் ஏதாவது இழப்பு ஏற்பட்டால், அதை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும்.

ஜவுளி ஆலைகளுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சுமார் ரூ.12 ஆயிரம் கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

ஜவுளித் தொழில் ஈடுபட்டுள்ள பஞ்சாலைகள், நூற்பாலைகள், பின்னலாடை, ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள், விசைத்தறியாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. இவற்றை தொகுத்து, ஒரே கோரிக்கை மனுவாக வழங்கினால், அது தொடர்பாக பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக நாடு முழுவதும் உள்ள, ஜவுளித் தொழில் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, அவர்களது கருத்துகளைப் பெற முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் உள்ள ஜவுளித் தொழில் அமைப்புகளை வரும் 26-ம் தேதி கோவைக்கு அழைத்து, அவர்களது கோரிக்கைகளைப் பெற இருக்கிறோம். இதேபோல, நாடு முழுவதுமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் தொடர்பாக, மும்பையில் வரும் 28-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அனைத்து கோரிக்கைகளையும் தொகுத்து, ஒரே மனுவாகத் தயாரித்து, நிதி, ஜவுளி, வர்த்தகம், தொழில் துறைகளிடம் அக்டோபர் 15-ம் தேதிக்குள் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.

சர்வதேச பிரச்சினைகள் காரணமாக, இந்தியாவின் பருத்தி நூல் ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 40 சதவீதம் வரை சரிந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் 100 மில்லியன் கிலோவாக இருந்த பருத்தி நூல் ஏற்றுமதி, ஜூன் மாதம் 60 மில்லியன் கிலோவாகவும், ஜூலை மாதம் 58 மில்லியன் கிலோவாகவும் குறைந்துள்ளது. பருத்தி நூலுக்கும் ஏற்றுமதி சலுகைகளை வழங்க வேண்டும், சர்வதேச நாடுகளுடன் வரியற்ற வர்த்தகம் செய்ய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகள் ஒரு மெகாவாட்டுக்கும் குறைவாக, வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவதை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும். காற்றாலை மின்சார சேமிப்பு வசதியைத் தொடரவும், பழைய காற்றாலைகள் தொடர்ந்து இயங்கவும் அனுமதி அளிக்க வேண்டும். பருத்தி கழிவுப் பஞ்சு மீது விதிக்கப்படும் ஒரு சதவீத வேளாண் சந்தைக் குழு வரியை நீக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x