Published : 24 Sep 2019 10:05 AM
Last Updated : 24 Sep 2019 10:05 AM

காய் உண்டால் நோய் இல்லை!- காய்கறி மருத்துவமனை நடத்தும் அருண்பிரகாஷ்

ஆர்.கிருஷ்ணகுமார்

உணவே மருந்து; மருந்தே உணவு என்று நம் முன்னோர்கள் வாழ்ந்தபோது, இந்த அளவுக்கு நோய்களின் தாக்கம் இருந்ததில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் நமது பாரம்பரியம், கலாச்சாரம், மருத்துவம் ஆகியவை நசுக்கப்பட்டு, மேற்கத்திய கலாச்சாரமும், பண்பாடும் மட்டுமின்றி, மருத்துவமும் நம்மிடம் நுழைந்தது. தற்போது உயர் மருத்துவ சிகிச்சை என்பது ஏழைகளுக்கு கொஞ்சம் எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த நிலையில், காய்கறிகளையே மருந்தாகப் பரிந்துரைக்கிறார் கோவையைச் சேர்ந்த பி.கே.அருண்பிரகாஷ்(43).

கோவை-திருச்சி சாலையில், சிங்காநல்லூர் அருகே பெர்க்ஸ் பள்ளியின் பின்புறம் உள்ள கூட்டுறவு காலனி பகுதியில் யோகேஷ்வர் காய்கறி வைத்தியமுறை மருத்துவமனையை (வெஜிடபுள் கிளினிக்) நடத்தி வருகிறார் இவர். காய்கறிகளே நமது நோய் தீர்க்கும் மருந்துகள் என்று கூறும் பி.கே.அருண்பிரகாஷை சந்தித்தோம்.

“பெற்றோர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி-வரலட்சுமி. அப்பா வங்கிப் பணியில் இருந்ததால், திண்டுக்கல், வேலூர், பெரியகுளம், கரூர், திருப்பூர், கோவை என பல்வேறு ஊர்களிலும் கல்வி கற்க நேர்ந்தது. பள்ளிப் படிப்புக்குப் பிறகு கரூர் தான்தோன்றிமலை அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். ஏறத்தாழ 10 ஆண்டுகள் கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிந்தேன். பின்னர், ஹோமியோபதி, அக்குபஞ்சர் பட்டயப் படிப்பு பயின்றேன். ஆரம்பத்தில் அக்குபஞ்சர், ஹெர்பல், ஆயுர்வேதா முறைகளில் சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன். இருந்தாலும் எனக்கு நிறைவு ஏற்படவில்லை.

நமது உடலில் ஏற்படும் வைட்டமின் பற்றாக்குறையே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணம் என்று உணர்ந்து, பழங்கள் மூலம் சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன். விலை காரணமாக எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்த முடியவில்லை. இதேபோல, கீரையை மருந்தாக கொடுத்தபோதும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, காய்கறிகளை மருந்தாக கொடுப்பது குறித்த ஆய்வு மேற்கொண்டேன்.

தற்போது உருளைக்கிழங்கு போன்றவற்றை அதிகம் பயன்படுத்தும் அளவுக்கு, நாட்டுக் காய்கறிகளைப் பயன்படுத்துவதில்லை. நாட்டுக் காய்கறிகள் குறித்த விவரங்களைத் திரட்டினேன். போதுமான விவரங்கள் கிடைக்காததால், ஒவ்வொரு காயையும் பச்சையாக சாப்பிட்டு, அது என்ன மாதிரியான பலன்களைத் தருகிறது என்று ஆராய்ந்தேன். ஏற்கெனவே தியான முறைகளை மேற்கொண்டிருந்ததால், காய்கறிகள் நமது உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களை உணர முடிந்தது.

இதையடுத்து, 2014-ல் யோகேஸ்வர் காய்கறி மருத்துவமனையைத் தொடங்கினேன். நமது உடலில் 12 வகையான வைட்டமின்கள் பற்றாக்குறையால்தான் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. காய்கறிகள் மூலம் தேவையான வைட்டமின்களைப் பெற முடியும். வெண்பூசணி, எலுமிச்சை, புடலங்காய், கொப்பரை தேங்காய், சுரைக்காய், கத்தரிக்காய், வாழைக்காய், முளைகட்டிய வெந்தயம், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கோவக்காய், கொத்தவரை, அரசாணிக்காய், முருங்கை உள்ளிட்டவை, நமது பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கக் கூடியவை.

பொதுவாக, காய்கறிகளை சமைக்காமல், பச்சையாக சாப்பிடுவதே நல்லது. மென்றும், அரைத்தும், ஊறவைத்தும் சாப்பிடலாம். சில பிரச்சினைகளுக்கு முருங்கை எண்ணெய், காய்கறி விதை எண்ணெய், மாதுளை தோல் பொடி, கிராம்பு எண்ணெய் உள்ளிட்டவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

ஒருவேளை பச்சையாக சாப்பிடப் பிடிக்கவில்லை எனில், வேகவைத்து சாப்பிடலாம். ஆனால், எண்ணெயில் பொறித்தோ, வறுத்தோ சாப்பிடும்போது, காய்கறியில் உள்ள சத்து நமக்கு கிடைக்காது.

இந்தியாவின் தட்பவெப்ப நிலையை நான்கு பெரிய பிரிவுகளாக பிரிக்கலாம். அதனடிப்படையில் ஒவ்வொரு மாதத்துக்கும் உகந்த காய்கறி, அதில் உள்ள ஊட்டச்சத்து, அதன் தத்துவம், தோஷம், துருவம், பருவம், நேரம், குணம், பக்தி, ஞானம், அந்தக் காய்கறிகளால் ஏற்படும் பலன்கள், குணமாகும் நோய்கள் குறித்த விவரங்களையெல்லாம் ஒரு அட்டவணையாக (சார்ட்) தயாரித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறேன். 12 மாதங்களுக்கான அட்டவணையில், ஒவ்வொரு மாதத்துக்கும் தனித்தனி அட்டவணையாகப் பிரித்து, பல்வேறு விவரங்களை அதில் தெரிவித்துள்ளேன்.

ஏனெனில், நமது பாரம்பரிய உணவு மற்றும் காய்கறி வகைகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கிறோம். அவற்றின் பயன்களை எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்ல வேண்டுமென்பதே எனது லட்சியம். நம்மைப் படைத்த இறைவனால் படைக்கப்பட்டவை காய்கறிகள். ஒவ்வொரு காயும் தனித்துவம் மிக்கவை. பிறவிக் குறைகளையும் நீக்கும் வல்லமை படைத்ததால்தான் காய்கறிகள் உயிர் நீத்தோருக்கு படையலாக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து, நார்ச்சத்து மிக்க காய்கறிகள், நமக்கு நோயை அண்டவிடாமல் செய்யும்.

அதிகமான உப்புச்சுவை உறுப்புகளை செயலிழக்கச் செய்யும். அதிகமான காரச் சுவை, ஆறாத புண்களை உருவாக்கும். அதிகமான புளிப்புச் சுவை வயோதிகத்தை ஏற்படுத்தும். இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை துவர்ப்பு, இனிப்பு, கசப்புத் தன்மைகள் சமன்படுத்தும். காரம் நிறைந்த உணவு நல்லது என்றாலும், எவ்வகை காரம் என்பது முக்கியமானது. இஞ்சி, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, கிராம்பு, வெந்தயம், ஏலக்காய், கடுகு, பட்டை, மஞ்சளில் உள்ள காரத் தன்மை உடலுக்கு நல்லது. ஆனால், பச்சை மிளகாய், வரமிளகாய் காரம் எவ்வகையிலும் உடலுக்கு ஏற்றதல்ல.நமது உடலைப் பொருத்தவரை, தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் தன்மை கொண்டது. தேவையானவற்றைக் கொடுத்தால் போதுமானது. வேண்டாததைத் திணிக்கும்போதுதான் கோளாறுகள் ஏற்படுகின்றன.

காய்கறிகளின் பலன்கள், ஒவ்வொரு காய்கறியிலும் உள்ள மருத்துவக் குணம் உள்ளிட்டவை தொடர்பாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறேன்” என்று கூறும் அருண்பிரகாஷிடம், “உங்கள் மருத்துவமனைக்கு யோகேஷ்வர் என்று பெயர்வைக்க காரணம் என்ன?” என்று கேட்டோம். “மனிதர்களுக்கு கடவுள் (ஈஷ்வர்) என்ற யோகத்தை உண்டாக்குவதே எனது குறிக்கோள். மனிதர்களுக்கு இறை ஞானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x